கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
மாணவி மர்ம மரணம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி மரணம் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ள நிலையில், இது கொலை என்று மாணவியின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் மாணவி மரணம் நடத்த இடத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஜூலை 13 ஆம் தேதி பிளஸ் 2 மாணவி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் விளக்கமளித்தது. இந்த நிலையில் மாணவியின் இறப்பில் சந்தேக இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் குற்றச்சாட்டினர். இதனால் மாணவிகளின் அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அது கலவரமாக மாறியது.
வன்முறையாக மாறிய போராட்டம்:
பள்ளிக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், 50-க்கும் மேற்பட்ட பள்ளியின் வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர். மேலும் சென்னை – சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்ட கும்பல், போலீசார் தடுப்புகளை உடைத்து வன்முறையில் ஈடுபட்டனர். காவல்துறை மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தினர். போலீஸ் வாகனங்களை தீ வைத்து எரித்தனர். இதனால் நிலைமைக் கட்டுபடுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
போலீசாரின் தடுப்புகளை உடைத்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பள்ளி வளாகத்தில் நின்றுக்கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து நொறுக்கி, தீ வைத்து எரித்தனர். ஆயிரக்கணக்கானோர் கூடியதால் , நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வெளி மாவட்டத்திலிருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். மேலும் வன்முறையில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிககை விடுத்தார்.
இதனையடுத்து, மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவியின் உடலில் மூக்கு, வலது தோள், வலது கை, வயிறு, வயிற்றின் மேல்பகுதி ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததாக சொல்லப்பட்டது. எலும்பு முறிவு, ரத்தச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல் அவரின் மேலாடை, கால் சட்டை, மேல் மற்றும் கீழ் உள்ளாடை இரண்டிலும் ரத்த கறை இருந்ததாக கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மாணவின் இரண்டாவது உடற்கூறு ஆய்வு ஜிப்மர் மருத்துவமனை குழுவினரின் சோதனைக்கு அனுப்பட்டது. மாணவி மரணம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில் அந்தப் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கர் மற்றும் இரண்டு ஆசிரியைகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தவிடப்பட்டுள்ளது.