கன்னியாகுமரி அருகே கடந்த மாதம் காணாமல் போன மாசானம் என்ற நபர், சிதறிய எலும்புக் (Human bones) கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ஆசிரமம் அருகே பழையாற்றின் குறுக்கே சோழன் திட்டைத் தடுப்பணை உள்ளது . அப்பகுதியில் பழையாறு கரையோரமாகப் புதர் மண்டிய இடத்தில் மனித எலும்புக்கூடுகள் சிதறிக் கிடப்பதாகத் தகவல் பரவியது.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற சுசீந்திரம் போலீசார் கைரேகை மற்றும் தடவியல் நிபுணர்களை வரவழைத்து அப்பகுதியில் சிதறிக்கிடந்த எலும்புக்கூடுகளைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.பின்னர், சிதறி கிடந்த எலும்புகளை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி உள்ளன
முதற்கட்ட விசாரணையில், தனிப்படை போலீசாரின் விசாரணையில் எலும்புக்கூடாகக் காணப்பட்டவர் கடந்த ஒரு மாதம் முன்பு காணாமல் போன மாசானம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அவரை இரண்டு நண்பர்கள் சேர்ந்து கொலை செய்துவிட்டு உடலை அப்பகுதியில் வீசி சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரி போலீசார் மாதவரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பாலகிருஷ்ணன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக, பாலகிருஷ்ணன் கன்னியாகுமரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் மது போதையிலிருந்த மாசானம், பாலகிருஷ்ணனிடம் உனது வீட்டிலிருந்து பொருட்களைத் திருடியது நான் தான் எனக் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், இதனைத் தன் நண்பர் விக்னேஷ் என்பவரிடம் கூறியுள்ளார்.
பின், இருவரும் சேர்ந்து மாசானத்தை வரவழைத்து அடி கொடுத்து வேறு எங்கெல்லாம் திருடியுள்ளான் என்பதையும், தனது வீட்டில் திருடியது தொடர்பாகக் கேட்கவும் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த மாதம் 18 ம் தேதி மூன்று பேரும் மது பாட்டில்கள் வாங்கிக் கொண்டு ஒரே இருசக்கர வாகனத்தில் சுசீந்திரம் ஆசிரமம் பகுதியில் சோழத்திட்டை அணைப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத மயானம் அமைந்துள்ள பகுதிக்குச் சென்று மது அருந்தியுள்ளனர்.
அப்போது, மது போதையிலிருந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் விக்னேஷ் இருவரும் மாசானத்திடம் கொள்ளை சம்பவம் குறித்துக் கேட்ட நிலையில், ஆத்திரமடைந்த இருவரும் இணைந்து மாசானத்தை கண்மூடித்தனமாக சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த மாசானம் மயக்கமடைந்துள்ளார். இதனைக் கண்ட பாலகிருஷ்ணன் மற்றும் விக்னேஷ் மாசானத்தை அப்படியே விட்டு விட்டு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்நிலையில், மயக்க நிலையிலிருந்த மாசானம் சிறுது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து பல நாட்கள் அவரது உடல் அதே பகுதியில் கிடந்ததால் அழுகிய நிலையில் கிடந்த மாசானத்தின் சடலத்தை, அப்பகுதியிலிருந்த தெரு நாய்கள் கடித்துக் குதறி இழுத்துச் சென்றுள்ளது.
இதனால், ஆங்காங்கே அவரது சடலத்தின் எலும்புக் கூடுகள் (Human bones) சிதறியுள்ளது தெரியவந்தது.
சில தினங்களுக்கு முன்பாக கேரளாவில் நரபலி சம்பவத்தைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் எலும்பு கூடுகள் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.