காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஜூன் மாதத்திற்கான நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிடக் கோரி தமிழக அரசு கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார் .
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :
காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை, சட்டப் போராட்டத்தின் மூலம் மத்திய அரசிதழில் வெளியிடச் செய்த பெருமைக்குரியவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும், தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். ஆனால், இதனைத் தர கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
காவேரி நீரில் தமிழ்நாட்டின் பங்கான 177.25 டி.எம்.சி. அடி நீரை தமிழ்நாட்டிற்கு கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என்பதும், இதில் ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி. அடி நீர், ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி. அடி நீர், ஆகஸ்ட் மாதத்தில் 45.75 டி.எம்.சி. அடி நீர், செப்டம்பர் மாதத்தில் 14.70 டி.எம்.சி. அடி நீர் என மாதாந்திர அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டுமென்பதும் நீதிமன்ற உத்தரவு.
இந்த ஆண்டு, டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து 10,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியில், தற்போதைய நிலவரப்படி 101 அடி தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது. நீர் வரத்து 324 கன அடியாக உள்ளது. ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி. அடி நீரை கர்நாடகம் திறந்து வேண்டுமென்ற நிலையில், இன்றைய நிலவரப்படி வெறும் 1.65 டி.எம்.சி.அடி நீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கர்நாடகத்தால் திறந்துவிடப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு, கர்நாடகம் மாதாந்திர அடிப்படையில் திறந்துவிட வேண்டிய நீர் காவேரி மேலாண்மை ஆணையத்தால் கண்காணிக்கப்பட வேண்டுமென்ற நிலையில், அண்மையில் காவேரி மேலாண்மை ஆணையக் கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ சாகுபடி. துவங்கியுள்ளதையும், ஜூன் மாத அளவான 9.19 டி.எம்.சி.அடி நீரில், 7.54 டி.எம்.சி. அடி நீர் இன்னும் அளிக்கப்பட்ட வேண்டுமென்றும், இந்த மாதத்திற்கான ஒதுக்கீட்டை உடனடியாக அளிக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டுமென்றும் தமிழ்நாடு சார்பில் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், கர்நாடகத்தின் சார்பில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும்போது நீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கர்நாடக அரசின் இந்தப் பதில் உபரி நீர்தான் அளிக்கப்படும், உரிய நீர் அளிக்கப்படாதது என்பதுபோல் உள்ளது.
கர்நாடகத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக பாடுபட்ட கட்சி தி.மு.க. காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கிய உறவை வைத்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கர்நாடக முதலமைச்சருடன் பேசி, தேவையான அழுத்தத்தை கொடுத்து, ஜூன் மாதத்திற்கு அளிக்க வேண்டிய 9.19 டி.எம்.சி.அடி நீரில், ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள 1.65 டி.எம்.சி. அடி நீர் போக மீதமுள்ள 7.54 டி.எம்.சி. அடி நீரினை உடனடியாக தமிழ்நாட்டிற்கு திறந்துவிடவும், ஒவ்வொரு மாதமும் உரிய நீரை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.