டி-20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதற்காக காஷ்மீர் மாணவர்கள் மீது இந்துத்துவ ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அணியினர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.
நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியின்போது இந்திய அணி போராடி தோற்றது. பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில், தொடர்ந்து தோல்விகளையே தழுவிய பாகிஸ்தான், முதன்முதலாக இந்திய அணியை வீழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் சிறப்பாக விளையாடியதாக முன்னாள் இந்திய அணியின் ஜாம்பவான்கள், சச்சின், சேவாக் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இந்திய அணியின் ஆலோசகரான தோனி ஆகியோரும் சிறப்பாக பேட்டிங் செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் மற்றும் ரிஸ்வானுக்கு கைகொடுத்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் சங்க்ரூரில் உள்ள பாய் குருதாஸ் கல்லூரியில் காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் மீது இந்துத்துவ ஆதரவு மாணவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். பீகார், ஹரியானா, உத்தரபிரதேசத்தை சேர்ந்த இந்துத்துவ சிந்தனை கொண்ட மாணவர்கள் கிரிக்கெட் ஸ்டம்ப் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென காஷ்மீர் மாணவர்கள் இருக்கும் விடுதி அறைக்குள் நுழைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ், பஞ்சாப் மாநிலத்தில், காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் வேதனையளிக்கிறது. அங்கு பயிலும் காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என பஞ்சாப் முதல்வர் சரன்சித் சிங் சன்னிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து, அந்த கல்லூரியில் நடந்த தாக்குதலில் சேதமான இடத்தை காட்டி வீடியோ எடுத்த காஷ்மீர் மாணவர்களில் ஒருவர் கூறுகையில்;
“நாங்கள் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்த்துகொண்டிருந்தோம். அப்போது உ.பி.மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் உள்ளே நுழைந்து எங்களுடைய அறையில் இருந்த நாற்காலி, படுக்கையெல்லாம் அடித்து நொறுக்கினர். பிறகு எங்களை தாக்கினர். நாங்களும் இந்தியர்கள் தான். இங்கு படிக்க வந்தோம். இதற்கு மோடி என்ன சொல்லபோகிறார்?” என்று வினவினார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை. இருதரப்பு மாணவர்களிடம் ஆதாரங்களும்,வாக்குமூலமும் போலிசார் வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஒரு கிரிக்கெட் விளையாட்டுக்காக மாணவர்கள் மீது மதவெறியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.