தமிழகம் முழுவதும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், அப்பகுதிக்கு சுற்று வட்டாரத்தில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்களை விற்பனை செய்வதற்கும், மது பார்களைத் திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்தது. இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல் தமிழகம் முழுவதுமாக 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இன்றைய தினமே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளதால், தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு சுற்று வட்டாரத்தில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக தேர்தலையொட்டி பிப்ரவரி 19ம் தேதி வரை 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்ட நிலையில், நாளை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருப்பதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், அசாம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காகவும் இன்று பிப்ரவரி 22ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூடுவதற்கு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் மதுபானங்களை கள்ளச்சந்தையில் விற்பவர்கள், கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால், நேற்று வழக்கத்தை விட அதிகளவில் குடிமகன்கள் மதுபான கடைகளில் குவிந்தனர். வழக்கமாக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதைப் போல நேற்று எலைட் மதுபான கடைகளிலும் கூட்டம் கூடி, அதிகளவில் மதுப்பாட்டில்களை வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது.