எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தை” சற்று கீழே வைத்துவிட்டு, பின்வரும் தகவல்களை அவரால் இயன்ற அளவுக்குப் புரிந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..
“எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 06ம் தேதியன்று, தமிழ்நாட்டில் அன்னிய முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சிக் குறித்த ஆதாரமற்ற, அடிப்படைப் புரிதல் இல்லாத, உள்நோக்கம் கொண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் வரலாறு காணாத தொழில் வளர்ச்சியை தமிழகம் கண்டு வரும் நிலையில், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மீது உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், தமிழகத்தின் பெருமைகளை உலகத்திற்குப் பறைசாற்றும் வேலையை எதிர்க்கட்சித்தலைவர் செய்திருக்க வேண்டும்.
மாறாக, நமது தொழில்முனைவோர்களையும், அயராமல் உழைத்து வரும் நமது தொழிலாளர்களையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும், கட்சியில் தனது தற்காலிக பொதுச் செயலாளர் பொறுப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் மத்திய பா.ஜ.க.வின் குரலில் பேசி, தமிழர்களின் உண்மையான வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர் என்பதை நிரூபித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
“சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தை” சற்று கீழே வைத்துவிட்டு, பின்வரும் தகவல்களை அவரால் இயன்ற அளவுக்குப் புரிந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
2023-24 ஆம் ஆண்டு ஒட்டமொத்த இந்தியாவிலும் அன்னிய முதலீடு குறைந்தபோதிலும், தமிழ்நாட்டில் 12.3% முதலீடுகள் அதிகரித்திருக்கின்றன. எனினும், நேரடி அன்னிய முதலீடுகள் வளர்ச்சிக்கான முழுமையான குறியீடு இல்லை என்பதை தொடர்ந்து பல்வேறு நேரத்தில் பல்வேறு நிபுணர்களும், தொழில்துறை அமைச்சர் என்ற முறையில் நானும், நமக்கு மிக அதிகமான முதலீடுகள் வந்தபோதிலும் கூறியிருக்கிறோம்.
இதற்கு காரணம், நிறுவனங்கள் தனது முதலீடுகளை ஒரு மாநிலத்திற்கு கொண்டு வந்து சேர்த்தாலும், அந்தக் கணக்கு அதன் தலைமை அலுவலகம் அமைந்துள்ள மாநிலத்தின் பெயரில் சென்றுவிடுகின்றன. எனவே, இதனை நிபுணர்கள் சரியானக் குறியீடாகக் கருதுவதில்லை.
இருப்பினும், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை உறுதி செய்து, 31 இலட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளார் திராவிட நாயகன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கிரகிக்க முயற்சிக்க வேண்டும்.
இதையும் படிங்க : பெரும் ஆபத்தில் ஜப்பான்! எச்சரிக்கை விடுத்த அரசு! நடப்பது என்ன?
தான் சமீபத்தில் படித்த புத்தகத்தை உள்ளே வைத்துவிட்டு, தலைப்பை மறந்துவிட்டேன் என்று சொன்னதுபோல, அரசியல் விபத்தில் முதலமைச்சராகவும் இருந்த எதிர்க்கட்சித் தலைவர், தனது ஆட்சிக்காலத்தில் நாங்குநேரியிலும் ஒசூரிலும் செமிகண்டக்டர் பூங்காக்களை அமைத்தோம் என்ற பொய் மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார். சட்டமன்றத்தில் நான் 2016ஆம் ஆண்டு மின்வாகனக் கொள்கை (E-Vehicle Policy) பற்றி பேசியபோது E-Way bill குறித்து பதிலளித்த உங்கள் கோஷ்டிக்கு, செமிகண்டக்டர் குறித்த புரிதல் இல்லாமல் போனதில் ஆச்சரியமில்லை.
நாங்குநேரியைப் பொருத்தவரை, அது தலைவர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாகத் திகழ்ந்த முரசொலி மாறன் அவர்களின் பெருமுயற்சியால் கொண்டு வரப்பட்ட தொழிற்பூங்கா திட்டமாகும். அதனை அ.தி.மு.க ஆட்சிக் காலம் முழுவதும் முற்றிலுமாகக் கிடப்பில் போட்டீர்கள்.
அதை மீட்டெடுத்து கொண்டு வருகிறது திராவிட மாடல் ஆட்சி. அதுபோல, ஒசூரில் முதன்முதலில் டி.வி.எஸ். நிறுவனத்தைக் கொண்டு போய் சேர்த்து, அங்கு தொழில்வளர்ச்சிக்கு வித்திட்டவரான தலைவர் கலைஞர் வழியில் நடக்கும் திராவிட நாயகன் ஸ்டாலினின் இன்றைய ஆட்சிதான் ஒசூருக்கு, தாங்கள் அறிவிக்க மறுத்த புதிய விமான நிலையத்தையும் இன்று அறிவித்து, ஓசூர் 2.0 வளர்ச்சியை உறுதி செய்ருக்கிறது.
தங்களால் இன்றும் கைவிடப்படமுடியாத உறவான பா.ஜ.க அரசுதான் செமிகண்டக்டர் நிறுவனங்களை வேறு மாநிலங்களுக்கு வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்ல முயற்சிக்கிறது என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பகிரங்கமாக அறிவித்தபோது கூட, அது பற்றி வாய் திறக்காமல் மௌனியாக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் செமிகண்டகடர் குறித்து கபட நாடகம் ஆடுகிறார் என்பதையே அவருடைய அறிக்கை காட்டுகிறது.
அனைத்து நெருக்கடிகளையும் முறியடித்து, செமிகண்டக்டர் சார்ந்த முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்து சேரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஜவுளித் தொழில் குறித்தும் கவலைப்படும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.கவோடு நேரடியாக கைகோர்த்திருந்த தனது ஆட்சிக்காலத்தில் ஒரு பைசா முதலீட்டைக் கூட ஜவுளித்துறைக்கு கொண்டு வந்து சேர்க்கவில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில்தான் அண்மையில் ஜவுளித்துறைக்காக 6% வட்டிமானியம் உள்ளிட்ட 500 கோடி ரூபாய்க்கு மேலான பல ஊக்கத்திட்டங்களை அறிவித்திருக்கிறது திராவிட மாடல் அரசு. ஆகையால்தான் 2021 முதல் 20,162.44 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஜவுளித் துறையில் மட்டும் வந்து குவிந்திருக்கின்றன.
விரைவில், நவீனத் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவில் ஒரு புது சகாப்தம் உருவாக இருக்கிறது. எத்தகைய முயற்சிகளையேனும் எடுத்து ஜவுளித் துறையில் பெரும் வளர்ச்சியைக் கொண்டு வர வேண்டும் என்று தமிழ்நாடு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார். தங்கள் ஆட்சியில் உங்கள் கூட்டாளிகளிடமிருந்து பெற முடியாத பி.எம்.மித்ரா பார்க் போன்ற ஜவுளிப் பூங்காக்களும் தமிழ்நாட்டில் தற்போதைய ஆட்சியில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
பிற மாநிலங்கள் நமது மாநிலத்தில் முதலீடு ஊக்குவிப்பு நிகழ்வுகளை மேற்கொள்வது குறித்து வேதனைப்படுவது போல தனது அறிக்கையில் காட்ட முயற்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர், இத்தகைய நிகழ்வுகள் எல்லா மாநிலங்களிலும் வழக்கமானதுதான் என்பதும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் இருந்தபோதும் தமிழ்நாட்டில் பிற மாநிலத்தின் முதலீடு ஊக்குவிப்பு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
அதுபோல, நாமும் பிற மாநிலங்களுக்குச் சென்று இத்தகைய முதலீடு ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடத்தி வருகிறோம். தொழில்துறை அமைச்சர் என்ற முறையில் நானே நேரடியாக அண்மையில் மும்பை, டெல்லி மற்றும் பெங்களூருவில் இத்தகைய நிகழ்வுகளை நடத்தி, தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்புகளையும் தொழில் கட்டமைப்பு வலிமையையும் எடுத்துரைத்து அதன் மூலம் பல முதலீடுகளும் நமது மாநிலத்திற்கு வந்துள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த வெள்ளை அறிக்கையைக் கேட்டிருக்கிறார், இருண்ட ஆட்சியை வழங்கிய எதிர்க்கட்சித்தலைவர். மக்கள் நலனில் அக்கறை கொண்டு சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கெடுத்து, எதிர்க்கட்சித் தலைவராகக் கூட அல்லாமல், ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியிருந்தாலே இது குறித்து நாம் கொடுத்திருந்த விளக்கத்தை அவர் கேட்டு அறிந்திருக்க முடியும்.
ஆனால், ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் திராவிட நாயகன் முதலமைச்சர் அவர்களின் சாதனைகளைப் பார்த்து,
“இது போன்ற ஆக்கப்பூர்வமானத் திட்டங்களை ஏன் செய்யவில்லை?” என்று சொந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே ஏளனம் செய்வார்களே என்று பயந்து, ஒட்டுமொத்த வெளிநடப்பைத் தாங்கள் மேற்கொண்டதால், முதலமைச்சர் அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களால் கிடைத்த முதலீடுகள், நிறுவப்பட்ட தொழிற்சாலைகள், கிடைக்கப் பெற்ற வேலைவாய்ப்புகள் குறித்து நான் கொடுத்த விரிவான விளக்கங்கள் எதுவும் தங்கள் காதுகளுக்கு எட்டவில்லை.
இனியேனும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கைகள் விடுவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியைப் பார்த்து ஒரு தமிழனாகத் தாங்களும் பெருமை கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.