மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக பாலாலய பூஜைகள் இன்று நடைபெற்றது.
கோவில் மாநகரமாகப் போற்றப்படும் மதுரையின் அடையாளமாக திகழ்வது மீனாட்சி அம்மன் திருக்கோவில். ஆண்டின் அனைத்து மாதங்களிலும் பல்வேறு திருவிழாக்கள், வைபவங்கள், உற்சவங்கள் நடைபெறும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங் கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்படும். அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 8.4.2009 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. முதல்வர் அரசு பொறுப்பேற்ற பிறகு குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கடந்த 2018-ல் மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுவாமி சன்னதியில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் கடுமையான சேதம் அடைந்தது. இதனை சீரமைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெறுகிறது.
இதற்கிடையே மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.25 கோடியில் திருப்பணிகள் நடத்தவும், வீரவசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் சீரமைக்கப்படும் என்றும், பணிகள் அனைத்தும் முடிந்து குடமுழுக்கு நடத்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
தற்போது 14 ஆண்டுகளுக்குப்பிறகு குடமுழுக்கு, திருப்பணிகள் நடைபெறுகிறது. முதற்கட்டமாக கோவிலின் கிழக்கு ராஜகோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 3 ஒன்பது நிலை கோபுரங்கள் மற்றும் அம் மன் ஏழுநிலை கோபுரம் ஆகிய 5 கோபுரங்களுக்கும் இன்று காலை பாலாலயம் நடைபெற்றது.
காலை 8.30 மணி முதல் 11 மணி வரை அனுக்ஞை, யஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணா ஹூதி, தீபாராதனை நடை பெற்று, ஊர்வலமாக உற்சவர் சன்னதி கொண்டுவரப்பட்டு ஓதுவாமூர்த்திகள் தமிழ் திருமுறைகள் பாட, வேதவிற்பன்னர்கள் வேதபாரயணம் செய்திட தீபாராதனைகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் வணிகவரி பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, திருமதி ருக்மணி பழனிவேல்ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ,தளபதி, பூமிநாதன், மேயர் இந்திராணி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.