தேர்தலுக்காக நாட்டின் பெயரை மாற்றுவது போல் பாஜக கபட நாடகம் ஆடி வருவதாக தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜி 20 அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதில் பாரத குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது. இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ள எதிர்க்கட்சி கூட்டணிகளின் வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாத பாஜக அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
இதற்கிடையில் இந்தியாவை பாரத் என பெயர் மாற்றம் செய்யும் மசோதா நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது :
தேர்தலுக்காக நாட்டின் பெயரை மாற்றுவது போல் கபட நாடகம் ஆடுகிறது பாஜக… India that is Bharat என்றுதான் ஏற்கனவே இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதி -1 ல் கூறப்பட்டுள்ளது. பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம், பாரத மாதா வாழ்க ! (Bharat Mata Ki Jai) போன்ற முழக்கங்கள் சுதந்திரப் போராட்ட காலம் தொட்டு காங்கிரசால் எழுப்பப்பட்டு மக்களால் இன்றும் பயன்படுத்தப்படுபவை.
INDIA கூட்டணி குறித்த அச்சமும் வெறுப்புமே பாரதம் என்ற பெயரை தாங்கள் முன்மொழிவது போல் பாஜகவை நடிக்க வைக்கிறது. மக்களை ஏமாற்றும் பாஜகவை ஏமாற வைக்க INDIA கூட்டணிக்கு வாக்களிக்க இந்திய மக்கள் தயாராகிவிட்டனர் என தனது ட்விட்டர் பதிவில அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார் .