உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் மேக்ஸ்வெல்லின் விடாமுயற்சியால் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது . மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது .
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கான் அணி அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இப்ராகிம் சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது .
இதையடுத்து 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணி விளையாடி. அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கிய முன்கள வீரர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தான் அணியின் சுழலில் சிக்கி அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான மேக்ஸ்வெல் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முயற்சியில் தீவிர ஈடுபட்டார். அவருக்கு பக்கபலமாக கம்மின்ஸ் களத்தில் ஆடிக்கொடுத்தார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய மேக்ஸ்வெல் அவ்வப்போது வானவேடிக்கை காட்டி ரன் குவிப்பில் தீவிர ஈடுபட மைதானத்தில் உள்ள அனைவரும் மேக்ஸ்வெல்லுக்கு ஆதரவு குரல் எழுப்ப ஆரம்பித்தனர்.
உடல் சோர்ந்தாலும் அதிரடியில் மிரட்டிய மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 201 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். 21 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.
இந்த அபார வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி தற்போது 3 வது அணியாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஏற்கனவே இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.