வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருவதால், எந்த இடத்தில் கரையை கடக்கும் என்று கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் தீவிரமடைந்துள்ளதால், கரையை கடக்கும் திசையில் மாறுப்பாடு ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து, இன்று வடதமிழகம் மற்றும் தென் ஆந்திரா பகுதியை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று 20 செ.மீ.,க்கும் மேல் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீவிரமடைந்துள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது, மேலும் தீவிரமடைந்து அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து வருவதால், கரையை கடக்கும் திசையில் மாறுபாடு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து எந்த இடத்தில் கரையைக் கடக்கும் என்று இன்னும் சரியாக அறிவிக்கப்படவில்லை. இருந்தபோதிலும், எந்த இடத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கிறதோ அங்கு மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.