விவசாயிகளின் போராட்டத்தை யாரும் தடுக்க முடியாது, அவர்களை அச்சுறுத்தவும் முடியாது.. அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை வைத்து விவசாயிகளை மிரட்ட முடியுமா? என மேகாலய மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேகாலயா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் உள்ள கிரா என்னும் கிராமத்தில் பசுக்கள் காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் சத்யபால் மாலிக் பேசினார். அப்போது, “குறைந்தபட்ச ஆதரவு விலையை(Minimum Support Price) அமல்படுத்தப்படாவிட்டால், சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கப்படாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும்.
இந்த முறை அது கடுமையான போராட்டமாக இருக்கும். இந்த நாட்டின் விவசாயியை உங்களால் தோற்கடிக்க முடியாது. உங்களால் அவர்களை பயமுறுத்த முடியாது. அமலாக்கத்துறை அல்லது வருமான வரி அதிகாரிகளை கொண்டு உங்களால் விவசாயிகளை பயமுறுத்த முடியுமா?
“பிரதமருக்கு அதானி என்ற நண்பர் இருப்பதால், ஐந்து ஆண்டுகளில் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக மாறியுள்ளதால், குறைந்தபட்ச ஆதரவு விலையை செயல்படுத்தப்படவில்லை,” என சத்யபால் மாலிக் கூறினார்.
மேலும் பேசிய அவர்; “கௌஹாத்தி விமான நிலையத்தில் பூங்கொத்து வைத்திருக்கும் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டதற்கு, ‘அதானி சார்பில் நாங்கள் வந்துள்ளோம்’ என்று பதிலளித்தார். அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன். இந்த விமான நிலையம் அதானியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதானிக்கு விமான நிலையங்கள், துறைமுகங்கள், முக்கிய திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ”அவுர் ஏக் தாரா சே தேஷ் கோ பெச்னே கி தையாரி ஹை” [அதாவது ஒரு வகையில், நாட்டை விற்பதுதான்], ஆனால் நாம் அதை நடக்கவிடக்கூடாது என கூறினார்.
அவர் பானிபட்டில், அதானி ஒரு பெரிய கிடங்கைக் கட்டி, குறைந்த விலையில் வாங்கிய கோதுமையைக் கொண்டு சேமித்து வைத்துள்ளார். “பணவீக்கம் இருக்கும்போது, அவர் அந்த கோதுமையை விற்பார்… அதனால் இந்த பிரதமரின் நண்பர்கள் லாபம் சம்பாதிப்பார்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாது, இதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்,” என்றார்.
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக மாலிக் மத்திய அரசை விமர்சிப்பது இது முதல் முறையல்ல. இந்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி, ஹரியானாவில் உள்ள தாத்ரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் திமிர்த்தனமாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
கடந்த ஞாயிறுபிரதமரைச் சந்திக்க மீண்டும் முயற்சித்தபோது பேசிய மாலிக், “டெல்லியின் எல்லையில் விவசாயிகள் அமர்ந்திருப்பதை நான் பார்த்தேன்… அவர்கள் 40 கிராமங்களில் உள்ள விவசாயிகள் ஆவர்… 700 விவசாயிகள் இறந்தார்கள் என்று பிரதமரிடம் சொன்னேன். ஒரு நாய் இறந்தால், டெல்லியில் இருந்து ஒரு இரங்கல் செய்தி அனுப்பப்படுகிறது. விவசாயிகளுக்கு எந்த இரங்கல் செய்தியும் அனுப்பப்படவில்லை…”
“அவர்கள் போராட்டத்தில் இறங்கி ஒரு வருடம் ஆகிறது, அவர்களுக்கு ஏதாவது கொடுத்து இதைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று நான் அவரிடம் சொன்னேன். அவர்கள் செல்வார்கள் என்றும் நான் ஏன் கவலைப்படவேண்டும் எனவும் பிரதமர் மோடி என்னிடம் கூறினார். அவர் அதை மிக சாதாரணமாக எடுத்துக் கொண்டார். உங்களுக்கு அவர்களைத் தெரியாது என்று நான் அவரிடம் சொன்னபிறகு, அவர் புரிந்து கொண்டார், மேலும் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன, பிரதமர் மன்னிப்பு கேட்டார்.
தற்போதைய பதவிக்காலம் முடிந்ததும் விவசாயிகளின் உரிமைக்கான போராட்டத்தில் முழுமையாக பங்கேற்பேன் என்றார்.
இறுதியாக பேசிய சத்யபால் மாலிக்; “விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்துவார்கள் என்றும், அது நிகழும்போது சாதி வேறுபாடுகளை விட்டுவிட்டு ஒன்றுபட்டுப் போராடுங்கள் என்றும் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இது சீக்கியர்கள் அல்லது ஜாட்களின் போராட்டம் என்று நினைக்க வேண்டாம்.
நீங்கள் ஒன்றிணைந்து போராட கற்றுக்கொண்டால் எந்த அரசாங்கமும் உங்களை தோற்கடிக்க முடியாது. இது ஒவ்வொரு விவசாயிக்கும், அவர்களது பண்ணைகளுக்கும், விளைபொருட்களுக்கும், பயிர்களின் விலைக்கும்…விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர், அவர்களின் விளைபொருள்கள் மலிவாகி, உரம், நீர்ப்பாசனம் விலை உயர்ந்தது,” என கூறினார்.