செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் (minister ponmudi) 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் கனிம வளத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2.65 லட்சம் லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த ஜூலை 17-ம் தேதி, இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
13 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.மேலும் பொன்முடி அவரது மகன், உறவினர்கள் என பினாமி பெயர்களில் உரிமம் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.
இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொன்முடியை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு, அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
இந்நிலையில்,நவ.30-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இதனையடுத்து இந்த விசாரணை தொடர்பாக அமைச்சர் பொன்முடி நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் காலை 10.30 மணி அளவில் விசாரணைக்கு ஆஜரானார். மதியம் 3.30 மணி வரை விசாரணை நடந்தது.
இதையடுத்து 4 மணி அளவில் விசாரணை முடிந்து அவர் வீடு திரும்பினார். 5 மணி நேரம் நடந்த விசாரணையின் அடிப்படையில், தயார் செய்யப்பட்ட அறிக்கையை, டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி, அதன்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.