ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் மீதான நல்ல பதில்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்; பஞ்சாப் வழக்கை மேற்கோள் காட்டி, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை முன் வைப்பார்கள் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி நூற்றாண்டை கொண்டாடும் விதமான கலைஞர் 100 திட்டத்தில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் “நிறுவனங்களின் நாயகர் – கலைஞர்” என்ற தலைப்பில் சிறப்பு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் தாமோ அன்பரசன், ரகுபதி, சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த சிறப்பு புகைப்பட கண்காட்சியில், கலைஞர் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் கலைஞர் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை விளக்கும் விதமாக 41 அரசு நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அரங்குகளில் அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி குறித்த புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு பார்வைக்காக, பல்வேறு கல்லூரி மாணவர்கள் வருகை புரிந்துள்ளனர்.
அரங்கங்களை பார்வையிட்ட பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி…
பஞ்சாப் மாநில ஆளுநர் குறித்து, உச்சநீதி மன்றத்தில் வெளியான தீர்ப்பை வைத்து, தமிழ்நாடு வழக்கறிஞர்கள் மேற்கோள் கட்டுவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,
முதலமைச்சர் தரப்பில் இருந்து 10 மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த மசோதாக்கள் மீதான பதில்கள் ஏதும் இன்னும் வரவில்லை. நிச்சயமாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில், நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பினால், நாங்கள் அதை மீண்டும் திருப்பி அவருக்கு அனுப்பும் போது அதற்கு அனுமதி தர வேண்டும் என அங்கே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
எனவே எந்த மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டாலும், அதனை மீண்டும் அனுப்புகிற பொழுது, இரண்டாவது முறை மறுப்பதற்கு வாய்ப்பு கிடையாது. 10 ஆவணங்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்டு இருக்கிறது என்பதை தான் உங்களுக்கு சொல்லி இருக்கிறோம். மொத்த கணக்கை பார்த்து விட்டு முழு தகவலை நாங்கள் தருகிறோம். மேலும் பஞ்சாப் வழக்கை மேற்கோள் காட்டி, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை முன் வைப்பார்கள் எனக் கூறினார்.