இந்தியாவிலேயே முதன்முறையாக தூத்துக்குடியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்தார். தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் தனி கவனம் செலுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வண்ணமாக தூத்துக்குடி சிப்காட் பகுதியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரத்து150 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யபப்ட்டு அனைத்து பூர்வாங்க பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சர்வதேச பர்னிச்சர் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
இறக்குமதியை குறைத்து உள்நாட்டிலேயே மரப்பொருட்கள் உற்பத்தியை பெருக்கும் வகையிலும், சர்வதேச தரத்தில் பர்னிச்சர்கள் தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையிலும் பர்னிச்சர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மர அறுவை ஆலை, பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 100 நிறுவனங்கள் வரை இந்த பூங்காவில் இடம்பெற உள்ளது.
இந்த பூங்கா மூலம் சுமார் 4,755கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், சுமார் மூன்றரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக 33 நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.