வீட்டில் கழிவறை இல்லாததால் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 30 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடலூர் அடுத்த அரிசி பெரியாங் குப்பத்தை சேர்ந்த 27 வயது இளம் பெண் ரம்யா. எம்.எஸ்சி. பட்டதாரியான இவர் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் 6-ந் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்து காதல் கணவனின் வீட்டிற்கு சென்ற பின்னர் தான் காதலன் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்பது புதுப்பெண் ரம்யாவுக்கு தெரியவந்தது.
அப்போதைக்கு ரம்யாவை சமாதனம் செய்த கார்த்திகேயன், வேறு வீடு பார்த்து அழைத்து செல்வதாக கூறியதோடு, இல்லையென்றால் தான் வீட்டில் கழிவறை கட்டிவிட்டு அழைத்துச்செல்கிறேன் எனக்கூறி திருமணமான மறு நாளே ரம்யாவை அவரது தாய் வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டதாக கூறப்படுகின்றது.
வேறு இடத்தில் வீடு பார்த்து விட்டு அழைத்துச்செல்வதாக ரம்யாவிடம் கூறிய கணவர் கார்த்திகேயன். வீடு பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே போனில் தகராறு ஏற்பட்டுள்ளது. தன்னை உருக உருக காதலித்த கார்த்திகேயனால் தனக்கு அடிப்படை வசதியான கழிப்பறையை கூட வீட்டில் கட்டிதர இயலவில்லையே என்று மனமுடைந்த ரம்யா துாக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ரம்யாவை மீட்டு புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரம்மியா நேற்று இறந்தார்.இதுகுறித்து திருப்பாதிரிப் புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என்பது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.