சென்னை தி.நகர் தாமஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுமி என்ற பெண் மகன் ஹரிஷ் உடன் வசித்து வருகிறார். 15 வயதான ஹரிஷ் கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை தூங்கிக் கொண்டிருந்த ஹரிஷை காலாண்டு தேர்வு உள்ளதால் பள்ளிக்குச் செல்லுமாறு தாய் சுமி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது பள்ளிக்குச் செல்லமாட்டேன், தேர்வு எழுதமாட்டேன் என தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டே திடீரென கோபித்துக்கொண்டே அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்குச் சென்ற ஹரிஷ் 3வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
இதைக் கண்ட கட்டிட காவலாளி ஹரிஷின் தாய் சுமிக்கு தகவல் தெரிவித்த நிலையில், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் படுகாயமடைந்த ஹரிஷை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஹரிஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் ஹரிஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் – தொடர்பாக மருத்துவமனை மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.