நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்ளிட்ட செயல்களுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு மீது பல்வேறு புகார்கள் எழுந்தன.
நாடு முழுவதும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, டெல்லி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் நடந்த NIA சோதனையை கண்டித்தும், அவ்வமைப்பின் தலைவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட PFI அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை கடந்த 22-ம் தேதி அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 8 மாநிலங்களில் 110 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் பல இடங்களில் கல்வீச்சு, வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளாவில் பெட்ரோல் வீச்சு சம்பவங்களும் அரங்கேறியது. இதனை தொடர்ந்து, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், கர்நாடகா, அசாம், டெல்லி, குஜராத், மராட்டியம், தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களில் பிஎப்ஐ தொடர்புடைய இடங்களில் நேற்று 2-வது முறையாக சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் போதும் 60 கைது செய்யப்பட்டனர். இந்த 2 சோதனைகளின் போதும் பல்வேறு சர்ச்சைக்குரிய ஆவணங்கள், பணம், டிஜிட்டல் கருவிகள் கைப்பற்றப்பட்டன.மேலும் இந்த குழுவுக்கு ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் போன்ற உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளில் பங்கேற்றதாகவும் கூறி உள்ளது.
இந்த நிலையில் பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகள் என 5 ஆண்டுகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு உள்ளிட்ட இந்தியாவின் 8 முன்னணி அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது.
இது தவிர, PFI இன் இணை அமைப்புகள் – Rehab India Foundation (RIF), Campus Front of India (CFI), அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் (AIIC), மனித உரிமைகள் அமைப்பின் தேசிய கூட்டமைப்பு (NCHRO), தேசிய பெண்கள் முன்னணி, ஜூனியர் ஃப்ரண்ட், அதிகாரம் இந்தியா அறக்கட்டளை மற்றும் கேரளாவின் மறுவாழ்வு அறக்கட்டளை ஆகியவையும் தடை செய்யப்பட்டன.
நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்தல். தேசத்திற்கு எதிரான அதிருப்தியை உருவாக்கும் நோக்கத்துடன், தேசவிரோத உணர்வுகளை தொடர்ந்து பரப்புவது மற்றும் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவை தீவிரமயமாக்குவது ஆகும்.
மேலும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய அமைப்பின் அனைத்து துணை நிறுவனங்கள் மற்றும் அனைத்து முன்னணிகளும் சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நாட்டின் பல இடங்களில் பிஎஃப்ஐ மீது நாடு முழுவது சோதனைகளை நடத்திய பிறகு இந்த தடை சட்டம் வந்துள்ளது.