சர்ச்சைக்குரிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் சில திரையரங்குகளில் மீண்டும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த இளம் பெண்களை காதல் என்ற பெயரில் கட்டாய மதமாற்றம் செய்து அவர்களை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ப்பதாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் கதை களம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த திரைப்படத்திற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன.
இதனை தொடர்ந்து சட்டம் ஒழுங்கை காரணம் காட்டியும், தியேட்டருக்கு மக்கள் போதிய அளவிற்கு வராததாலும், தியேட்டரில் இருந்து அந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இதனால், தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்பட்டது. முறைப்படி தணிக்கை அறிக்கை பெற்றுள்ள பின்னரும் படத்தை திரையிடுவதை தடுப்பதாக பட குழுவினர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
ஆனால், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்படவில்லை என்றும், போதிய வரவேற்பு இல்லாததால் தியேட்டர் உரிமையாளர்களே படத்தை எடுத்துவிட்டதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிடுவதற்கு தேவையான முழு பாதுகாப்பை அளிப்பது மாநில அரசின் கடமை என்றும், நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ படத்திற்கு தடை விதிக்ககூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழகத்தின் சில திரையிரங்குகளில் மீண்டும் திரையிடப்பட்டுள்ளன. சென்னையை தவிர பிற நகரங்களில் இந்த திரைப்படம் மீண்டும் திரைக்கு வந்துள்ளதாக என்பது உறுதிபடுத்தப்படவில்லை.
திருப்பூரை பொறுத்தவரை இந்த திரைப்படம் மீண்டும் திரையிடப்படவில்லை என்றும், விநியோகஸ்தர்களே இந்த படத்தை வாங்க மறுத்துவருவதாகவும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பொதுவாக இந்தி திரைப்படங்களை வாங்கம் விநியோகஸ்தர்கள் தமிழகத்தில் குறைந்த அளவிலேயே உள்ளனர் என்றும், கடந்த 2 வருடங்களாக இந்தி திரைப்படங்கள் தமிழகத்தில் குறைந்த அளவிலேயே திரையிடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.