தமிழகத்தில் நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை பெருகுவதை கட்டுப்படுத்த நீர்வளத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் மருத்துவர் புகழேந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை வருமாறு:-
தமிழகத்தில்,சென்னையிலும்,பிற இடங்களிலும், உள்ள நீர் நிலைகளில் பெருமளவு ஆகாயத்தாமரை வளர்ந்து நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
ஆகாயத்தாமரையின் காரணமாக நீர்நிலைகளில் ஒளிச்சேர்க்கைக்கு தடை, நீர் ஆவியாதல் 2.5 மடங்கு அதிகரிப்பு, நீர் நிலைகள் விரைவாக வறண்டுபோதல் ஆகியவை ஏற்பட்டு வருகிறது.
நீர் குறையும்போது நிலத்தடி நீர்மட்டமும் குறைவதோடு, நீர்நிலை ஆக்கிரமிக்கப்படும் அபாயமும் உள்ளது.
ஆகாயத்தாமரையால் நீரிலுள்ள ஆக்ஸிஜன் அளவும் குறைந்து விடுகிறது.
இதையும் படிங்க: ஸ்டாலினின் சுற்றுப் பயணம்; என்ன சொல்கிறார் செல்லூர் ராஜு?
இதனால் மற்ற தாவரங்களும், மீன்களும் அவற்றுடன் போட்டியிட்டு வளரமுடியாமல் போய்விடுகிறது.
1930 களில்,59 ஏக்கரில் இருந்த சென்னை உள்ளகரம் ஏரி, தற்போது ஆகாயத்தாமரை ஊடுறுவல்/பரவல் காரணமாக,பெருமளவு காணாமல் போயுள்ளது.
மேடவாக்கத்தில்,3 பெரிய ஏரிகள் இருந்ததால்,நிலத்தடி நீர்மட்டம் நன்கு இருந்தது. அங்குள்ள நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை பாதிப்பிற்குப் பின் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக குறைந்து போயுள்ளது.
ஆகாயத்தாமரை பெருகுவதால் நீர்நிலைகளின் சூழல் சமன்பாடு முற்றிலும் பாதிக்கப்படுகிறது.
ஆகாயத்தாமரையின் பெரிய,தடித்த வேர்கள்,கொசுக்களின் லார்வாக்கள் வளரும் இடமாக உள்ளது.
இதனால் ,கொசுக்களால் ஏற்படும் நோய்களும்,ஆகாயத்தாமரை இருந்தால் அதிக பாதிப்பை மக்களிடையே ஏற்படுத்தும்.
இதனை தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே ஆகாயத்தாமரையை நீர்நிலைகளில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசின் நீர்வளத்துறை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் புகழேந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.