”ஆறுமுகசாமி கமிஷனை வைத்து அரசியல் செய்யலாம். ஆனால், அது சட்டப்பேரவையில் எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணைய விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசனின் அறிக்கை ஆகியவை தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த அறிக்கைகள் பல்வேறு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது அறிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த போது அவர்,
”ஆறுமுகசாமி கமிஷனை வைத்து அரசியல் செய்யலாம். ஆனால், அது சட்டப்பேரவையில் எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அறிக்கை தொழில்முறை அல்ல. ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையில் தொழில்நுட்ப ரீதியாக பல விஷயங்கள் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் அ.தி.மு.க.வுக்கு ஒரு பிரிவில் 62 எம்எல்ஏக்களும், ஒரு பிரிவில் 4 எம்எல்ஏக்களும் உள்ளனர். சபாநாயகர் நடுநிலையாக செயல்பட்டு எண்ணிக்கைக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து,தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கண்மூடித்தனமாக மனித உயிரைக் கொல்வது கொடுமையின் இறுதிச் செயலாகும். இதில் இருந்து தமிழக காவல்துறை பாடம் கற்று, மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து பேசிய அவர் ,தீபாவளியன்று டாஸ்மாக் கடைகளை குறிவைப்பது தவறான போக்கு. சமீபத்தில் அரசு வெளியிட்ட தகவலின்படி, டாஸ்மாக் மூலம் 35 சதவீதம் வருமானம் வருவது தெரியவந்துள்ளது.
இதை நாட்டுக்கான வளர்ச்சி என்று எடுத்துக்கொள்ளக் கூடாது, சரிவாகத்தான் பார்க்க முடியும். இது நாட்டுக்கு கேடு… தமிழக அரசுக்கு கேடு. மேலும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தை இரு மாநில அரசுகளும் பேசி தீர்வு காண வேண்டும். இதுகுறித்து கேரள முதல்வருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி தீர்வு காண வேண்டும்,” என்றார்.