அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக் கொண்ட நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சட்டப்பிரிவு 145 இன் படி வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தினி சீல் வைத்தார்.
இதனை தொடர்ந்து,அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ள நிலையில், சென்னை உயா்நீதிமன்றமும் பொதுக்குழுவை கட்சி விதிகளுக்கு உள்பட்டு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது.இருப்பினும் பெரும் பரபரப்புக்கு மத்தியில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களை நிறைவேற்ற ஒப்புதல் வழங்கியது.
இதற்கிடையே பொதுக்குழுவை புறக்கணித்து அதிமுகவின் ஓபிஎஸ் இன்று கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர்.
அதேநேரம், தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் பிரசார வாகனத்தில் அவரது ஆதரவாளர்கள் வைத்தனர். இந்த நிலையில் அங்கிருந்த இபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் கற்களை எரிந்து மோதிக் கொண்டனர்.
இதனையடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அப்போது அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த பிரச்சனையைடுத்து ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக ஓபிஎஸ் மீது அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சட்டம் – ஒழுங்கு பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஆலோசனை மேற்கொண்ட காவல் இணை ஆணையர், மற்றும் வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் , அதிமுக அலுவலகத்திற்கு தற்காலிகமாக சீல் வைத்தது.
இதனை தொடர்ந்து, தலைமை அலுவலம் சூறையாடப்பட்டது தொடர்பாக பதிவான நான்கு வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக அளித்த புகாரில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவும் செய்யப்பட்டதாக குறிபிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும், பன்னீர்செல்வம் தரப்பிற்கும் ஏற்பட்ட தகராறால், இரு தரப்பினருக்கும் சுவாதீன பிரச்சனை இருந்ததாகவும், அதன்படி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கபட்டதாகவும், ஆனால் அவ்வாறு எந்த பிரச்சனையும் இல்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.
அந்த சீலை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு அதிமுக அலுவலகத்திற்குள் தாங்கள் சென்றபோது, அலுவலகத்தை திறந்து பார்த்த போது சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவற்றை காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 11இல் புகுந்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றது தெரியவந்தாகவும், இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராஜம் புகார் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட ராயப்பேட்டை காவல் நிலையத்தினர், ஒப்புகை சீட்டு கூட வழங்கவில்லை எனவும், உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட பிறகே புகாரை பெற்றதற்கான சான்று கிடைக்கப்பெற்றதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜூலை 23ஆம் தேதி புகார் அளித்தும், புகாரை காவல்துறையினர் உரிய முறையில் விசாரிக்கவில்லை எனவும், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வருவதால், புகாரை சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம், ஆவணங்கள் சூறை தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக கூறி, அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்தார்.
இதைபதிவு செய்த நீதிபதி, வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது குறித்து தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.