சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயன்முறை பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வந்த மாணவர் ஜி.அருணாசலேஷ். கடந்த 22-ம்தேதி சாலை விபத்தில் தலையில்பலத்த காயமடைந்த அவர், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், மாணவர் மூளைச்சாவு அடைந்தார். பெற்றோர் கோபாலகிருஷ்ணன், ராஜேஸ்வரி மற்றும் இரண்டு சகோதரிகள் மாணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். மாணவரின் கல்லீரல் இதேமருத்துவமனையில் சிகிச்சை பெறும் சென்னையை சேர்ந்த 56 வயது ஆணுக்கு மருத்துவர்கள் பொருத்தினர்.
கண் விழிப்படலங்கள் இதே மருத்துவமனையில் இருவருக்கு பயன்படுத்தப்பட்டன. இதயம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவருக்கும், ஒரு சிறுநீரகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் தேனியில் வசிக்கும் 17 வயது பெண்ணுக்கும் பொருத்தப்பட்டது.