சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் 3-வது வழித்தடத்தில், சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு செய்யும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப் படுகின்றன. தற்போது, 45-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டப்பாதை பணி, சுரங்கப்பாதை பணி, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி உட்பட பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் அனைத்தையும் வரும் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புறநகர் பகுதிகளை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க திட்டமிடப்பட்டது.
தொடர்ந்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 வழித் தடங்களையும் நீட்டிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, மாதவரம் பால் பண்ணை – சிறுசேரி வரையிலான 3-வது வழித்தடத்தை கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை ( 26 கி.மீ. ) நீட்டிக்கவும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரை ( 43 கி.மீ. ) நீட்டிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.
இது தவிர, மாதவரத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித் தடத்தை கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை ( 16 கி.மீ. ) நீட்டிக்கவும் ஆலோசிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழித்தடங்கள் நீட்டிப்பு தொடர்பாக சாத்தியகூறு அறிக்கை தயாரித்து, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இவற்றில், 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை நீட்டிப்பது, 5-வது வழித்தடத்தில் கோயம்பேட்டில் இருந்துஆவடி வரை நீட்டிப்பது ஆகியவை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் அனுமதி அளித்தது.
தமிழக அரசுக்கு பரிந்துரை: அதே நேரத்தில்,3-வது வழித்தடத்தில் சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இருப்பினும், இந்த நீட்டிப்பு திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.