முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரி மாவட்டம் முழுவதும் வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று முழு கடையடைப்பு நடைபெற உள்ளது.
முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு புறப்பட்டனர்.
ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி அடுத்த நஞ்சப்பா சத்திரம் பகுதியில் சென்றபோது கீழே விழுந்து நொறுங்கியதில் முப்படைத் தலைமை தளபதி பிபின்ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நேற்று காலை வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் அஞ்சலி செலுத்தப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ் டாலின், ராணுவ அதிகாரிகள் உள்பட அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அனைவரது உடல்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டன.
இந்த நிலையில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று மாவட்டம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என வியாபாரிகளும், ஓட்டல் உரிமையாளர்களும் அறிவித்தனர்.
இன்று ஒருநாள் மட்டும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தங்கள் பஸ்களை இயக்காமல் நிறுத்தி வைத்தனர். இதனால் தனியார் பஸ்கள் இன்று ஓடவில்லை.இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்களும், 4 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா வாகனங்களும் இயங்கவில்லை.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் மார்க்கெட் பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.