உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மருத்துவ சிகிச்சை பெறஅடைக்கலம் தரும்படி நித்யானந்தா இலங்கை அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ சிகிச்சைக்கு அடைக்கலம் கோரி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நித்தியானந்தா கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா நடத்திவந்த பல ஆசிரமங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்திருந்தாகவும், மேலும் இவர் மீது ஆள் கடத்தல் நில ஆக்கிரமிப்பு என இன்னும் பல குற்ற வழக்குகள் இவர் மீது குவிந்து வருகிறது.
இந்தியாவிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படும் நித்தியானந்தா கைலாசா என்ற தனித்தீவை உருவாக்கியதாகவும், தனி நாணயம், சட்டத் திட்டம் ஆகியவைகளை உருவாக்கி கைலாசாவுக்கு வர விசா வேண்டும் என்றும், கைலாசாவிற்கு தனி விமான வசதி வேண்டுமென்றும் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்தத் தீவானது ஈக்வடார் நாட்டில் இருப்பதாக தகவல் வெளியானாலும் அதை அந்நாட்டு அரசாங்கம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தாலும் ஆன்லைன் மூலமாக அவ்வபோது அவரது பக்தர்களுக்கு காட்சி தந்து சொற்பொழிவாற்றி வருகிறார் நித்தியானந்தா.
முன்னதாக, கைலாசா அதிபர் நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்தும், அவர் ஜீவசமாதி அடைந்துவிட்டதாகவும் கூறி பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அவர் இறந்துவிட்டதாகவே சிலர் நேரடியாக சமூக வலைதளங்களில் பதிவிட, உடனே அதை மறுக்கும் விதமாக, களத்தில் குதித்த நித்தியானந்த மிகவும் பலவீனமான நிலையில், தனது போட்டோவை வெளியிட்டார்.
இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு அடைக்கலம் கோரி இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு நித்தியானந்தா கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில், தனது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் உடனடியாக தனக்கு மருத்துவ சிகிச்சைக்கு அடைக்கலம் தரவேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.
நித்தியானந்தா நீண்ட காலமாக சிறுநீரகப் பிரச்னையால் தவித்து வருவதாகவும், மொரீஷியஸ் டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தும் அவரது உடலில் பெரிய முன்னேற்றமில்லை என்றும் கூறப்படுகிறது.