”கோயிலை மூடுவது தான் திமுக-வின் சமூகநீதிக் கொள்கையா?” -கொந்தளித்த சீமான்!!

விழுப்புரம், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்குள் செல்வதற்குரிய ஆதித்தொல் குடிமக்களின் வழிபாட்டுரிமையை நிலைநாட்டாது, கோயிலை முத்திரையிட்டு மூடுவதா? என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆதித்தொல்குடிகளுக்குக் கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்படும் பொழுது சட்டத்தின் துணையோடு அவர்கள் உள்ளே நுழைய வழிவகை செய்வதும், வழிபாடு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதும்தான் சரியான நிர்வாக நடவடிக்கையாக இருக்க முடியும்.

அதனைவிடுத்து, கோயிலுக்கு முத்திரையிட்டு, அக்கோயிலை மொத்தமாக மூடுவது சிக்கலை மேலும் பெரிதுப்படுத்துமே ஒழிய, ஒருபோதும் தீர்வைத் தராது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமெனக் காரணம் கூறி கோயிலை இழுத்து மூடியிருப்பது அப்பட்டமான ஏமாற்றுவேலை. இதன்மூலம் மக்களிடையே மேலும் பதற்றமும், இறுக்கமும்தான் உருவாகும்.

சாதியின் பெயரால் உரிமைகள் மறுக்கப்படும்போது, சக
மக்கள் ஒடுக்கப்படும்போது ஆளும் அரசு உரிமையையும், நியாயத்தையும் நிலைநாட்ட வேண்டும் அதை விடுத்து சிக்கலைக் கிடப்பில் போடுவது சனநாயகத் துரோகமாகும்.

அற்ப அரசியலுக்காகவும், சாதிய வாக்குக்காகவும் இரட்டை வேடமிடும் திமுக அரசின் இத்தகைய சந்தர்ப்பவாதத்தின் பெயர் தான் ‘திராவிட மாடல்’ ஆட்சியா? பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தராது கோயிலையே மூடுவதுதான் திமுகவின் சமூக நீதிக்கொள்கையா? ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த்தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 மாதங்களைக் கடந்தும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவோ.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாகச் சென்று ஆறுதல் சொல்லவோ, சாதியத்தின் குறியீடாக இருக்கும் அந்தக் குடிநீர்த்தொட்டியை இடித்துத் தகர்க்கவோ முன்வராத திமுக அரசு, இக்கோயில் விவகாரத்தில் கோயில் வழிபாட்டுரிமையைப் பெற்றுத் தராது கோயிலையே முத்திரையிட்டு, மூடுவது எந்தவகையில் நியாயமாகும்? இதுதான் திராவிடம் சாதியத்தையும், தீண்டாமையையும் எதிர்க்கும் இலட்சணமா? பேரவலம்!

ஆகவே, மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் விவகாரத்தில் முத்திரையிடப்பட்டு, மூடப்பட்டதைத் திரும்பப் பெற்று, கோயிலைத் திறக்க வேண்டுமெனவும், காவல்துறையினரின் பாதுகாப்போடும், அரசதிகாரிகளின் துணையோடும் ஆதிக்குடிகள் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்யும்
உரிமை நிலைநாட்டப்பட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி
சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts