ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமற்றது என்றும், ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் இருந்தாலே தேர்தல் செலவு குறைந்து விடும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
சமீபமாக பாஜகவும், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் தொடர்ந்து வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, தமிழகத்தில் மோடியை எதிர்த்து போட்டியிட தான் தயார்.. அண்ணாமலையால் தன்னை விட ஒரு ஓட்டு அதிகம் வாங்க முடியுமா என்று சவால் விட்டார் சீமான்.
அதற்கு பதில் அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடட்டும் அவர் தோற்றுதான் போவார் எனக் கூறினார். இப்படி மாறி மாறி இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற சீமான், மீண்டும் பாஜகவை சீண்டியுள்ளார்.
அப்போது செய்தியாளர்களுடன் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசிய போது..
5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதை குறி வைத்தே பாஜக சிலிண்டர் விலையில் 200 ரூபாய் குறைத்துள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை 2000 ரூபாய் உயர்த்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என கூறினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த மத்திய அரசு முயற்சி செய்கிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, பதில் அளித்த சீமான்,
கழுத்தை சுற்றி மூக்கை தொடலாமா? ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமற்றது. இதற்கு ஆதரவு கொடுத்தவர் கருணாநிதி. இவர்கள்தான் திராவிட நாடு கேட்ட திருவாளர்கள். மாநில தன்னாட்சி கேட்ட பெருமக்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தலில் என்ன நடந்து விடும்? எதுவும் நடக்கப்போவதில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தினால் ஒருமுறை ஆட்சி கவிழ்ந்தால் எல்லா மாநிலத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்துவது தண்டச்செலவு வெட்டிச்செலவு என்று கூறியுள்ளார்.
குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல உள்ளது மத்திய அரசின் நடவடிக்கை. பூவின் அருமையும் தெரியவில்லை பூமாலையின் அருமையும் தெரியவில்லை. அவர்கள் கையில் தேசத்தை கொடுத்து விட்டு நாம் முழித்துக் கொண்டிருக்கிறோம். எல்லோராலும் ஒரே சட்டையை போட முடியாது அது போலத்தான் ஒரே தேர்தல் நடத்த முடியாது.
ஒரே நேரத்தில் லோக்சபா, மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்தினால் செலவு குறையும் என்று சொல்வதை ஏற்க முடியாது. ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் இருந்தாலே தேர்தல் செலவு குறையும். இந்தியா என்பது ஒரே நாடு அல்ல அது பல மாநிலங்களின் கூட்டமைப்பு என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.