திட்டமிட்டு திரைக்கதை எழுதியது போல அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வம் அவமதிக்கப்பட்டுள்ளார் என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அவமானப்படுத்தப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். அதிமுக பொதுக்குழுவின்போது, தொடங்கிய முதலே, ஜெயக்குமார், வளர்மதி, கேபி முனுசாமி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்து பேசினர். ஆனால் அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை கூட அவர்கள் உச்சரிக்கவில்லை.
பிறகு, பொதுக்குழுவில் நிறைவேற்றபடவிருந்த 23 தீர்மானங்களையும், பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டதாக சிவி சண்முகம் மைக்கை பிடுங்கி ஆவேசமாக கத்தினார். பிறகு கே.பி முனுசாமியும் பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானங்களை நிராகரித்துவிட்டதாகவும் அவர்கள் கேட்கும் ஒரே தீர்மானம் ஒற்றைத் தலைமை தான் எனவும் பேசினார்.
இதனையடுத்து அரங்கத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வத்தை வெளியேறுமாறு ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர் கோஷங்களை எழுப்பி வந்தனர். ஒருகட்டத்தில், ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அரங்கத்தை விட்டு வெளியேறினர்.
வெளியேறும்போது வைத்திலிங்கம் சட்டத்திற்கு புறமான கூட்டம் இது என மைக்கில் பேசிவிட்டு கோஷமிட்டவாரு வெளியே சென்றனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசி தாக்கினர். ஓபிஎஸ் வந்த பிரச்சார வாகனமும் பஞ்சராக்கப்பட்டது. இந்த நிலையில், பல்வேறு அவமானங்களுக்கு மத்தியில், கனத்த மனதோடு வெளியேறினார் ஓபிஎஸ். தர்மயுத்தம் நடத்தியவருக்கா இந்த நிலைமை? என பொதுமக்கள் மத்தியில் ஒருவித அனுதாபம் ஏற்பட்டது.
இந்த நிலையில், ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்டது குறித்து அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்;
“திட்டமிட்டு திரைக்கதை எழுதியது போல அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்டார்; ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை, வருத்தம் தெரிவிக்கவில்லை” என வேதனை தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் நடத்தப்பட்டவிதம் சத்தியமாக கண்ணீர் வரவழைக்கிறது.
அதிமுகவின் தலைமையை தேர்ந்தெடுப்பது கடைக்கோடி தொண்டர்களுக்கு தான் உரிமை இருக்கிறது என திமுக-விலிருந்து விலகியவுடனேயே எம்.ஜி.ஆர் அதிமுக-வில் பைலாவை கொண்டுவந்தார். எந்த மாற்றம் வந்தாலும், மூளை, இதயத்தை மாற்றக்கூடாது என்பது போல, இந்த பைலாவை யாராலும் மாற்றமுடியாது. தன்னை எப்படி திமுக-விலிருந்து நீக்கினார்களோ அப்படி ஒரு நிகழ்வு அதிமுகவில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அவர் அதிமுக தொடங்கியபோது எழுதப்பட்ட இந்த பைலாவை யாராலும் மாற்றமுடியாது; இரட்டை தலைமை மக்களால் ஏற்கப்பட்டது; யாருடைய சுயநலம் அதிமுகவின் பிளவுக்கு காரணம் என்பது அனைவருக்கு தெரியும்;அதிமுகவை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டுமென திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது இந்த பொதுக்குழு; ஜனநாயகத்திற்கு மாறாக, ஒரு நில அபகரிப்பு நடப்பது போல அதிமுகவில் அரசியல் அபகரிப்பு நடக்கிறது” என கூறினார்.