OPS Speech On Modi’s Stage : கோவையில் நேற்று வாகன பேரணியை முடித்துவிட்டு அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (19.03.2024) காலை சுமார் 11 மணியளவில் கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அதன் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதியம் 1 மணியளவில் சேலம் வருகை தந்தார்.
அங்கு கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் நடக்கும் சேலம், நாமக்கல், கரூர், நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருக்கு வாக்கு சேகரித்து மோடி பேசவிருக்கும் மேடை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
அந்த மேடைக்கு பின்புறம் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் பிரதமரின் ஹெலிகாப்டர் வந்து இறங்கியது.
அங்கிருந்து, விழா மேடைக்குச் செல்ல அமைக்கப்பட்டுள்ள தனி சாலை வழியாக கார் மூலம் மேடைக்கு வந்தார் மோடி. மேடையில், சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகளும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் மோடியின் வருகைக்கு முன்பாக பேசினர்.
இதையும் படிங்க : “இதுக்குத்தாங்க பாமகவோட கூட்டணி..!” – அண்ணாமலை சொன்ன ‘அடடே’ காரணம்!
மேலும், மோடியின் இந்த பொதுக்கூட்ட மேடையில் இன்று காலை பாஜக கூட்டணியில் இணைந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித்தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த முறை மோடியின் மேடையில் இடம் ஒதுக்கப்படாத முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருக்கும் இந்த சேலம் மேடையில் இடம் ஒதுக்கப்பட்டு அவர்களுக்கும் பேச வாய்ப்பளிக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியின் போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து பின்னர் பாஜகவில் இணைந்த கே.வி.ராமலிங்கம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து மோடியின் வருகைக்கு முன்பாக மேடையில் உள்ளவர்களை பேசுமாறு அழைத்துக் கொண்டிருந்தார்.
ஒவ்வொருவரையும் அவர்களின் கட்சி மற்றும் பதவியின் பெயரைச் சொல்லி அழைத்துக் கொண்டிருந்த அவர், ஓ.பி.எஸ்.ஐ பேச அழைக்கும் போது மட்டும், “அதிமுக சார்பாக இப்போது ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் பேசுவார்கள்” என்று கூற, சிரித்த முகத்தோடு மைக் முன் வந்து நின்றார் ஓ.பி.எஸ்.
மோடி அரசின் சாதனைகளை பேசிக் கொண்டே வந்த அவர், “இந்தியாவிலேயே ஒரே அரசாணையில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய ஒரே பிரதமர் நரேந்திர மோடிதான்” என பேசிக்கொண்டிருக்கும் போதே பிரதமரின் கார் மேடை இருக்கும் பகுதிக்குள் நுழையவே OPS Speech On Modi’s Stage,
சட்டென ஓ.பி.எஸ்.சின் பேச்சை வழிமறித்து மைக்கை பிடுங்கிய கே.வி.ராமலிங்கம், “மோடி வாழ்க, மோடி வாழ்க…” எனக் குரல் எழுப்ப, ஒரு கனம் ஸ்தம்பித்து நின்ற ஓ.பி.எஸ். பின்னர், தன் இருக்கைக்கு சென்று மோடிக்காக அனைவரையும் போல எழுந்து நின்றார்.
அதிமுக கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை முற்றிலுமாக இழந்து நிற்கும் முன்னால் முதல்வரான ஓ.பன்னீர் செல்வம் தற்போது பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட முடிவு செய்த பிறகு, “இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்” என்று கூறி வந்தார்.
அதிமுகவின் கட்சி, கொடி மற்றும் சின்னத்தை ஓ.பி.எஸ். பயன்படுத்தக் கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவே,
அதன்படி கடந்த ஆண்டின் இறுதியில் அதிமுக லெட்டர் பேடு, இரட்டை இலை சின்னம், கட்சி கரை வேட்டி உள்ளிட்டவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்கால தடை விதித்து இருந்தது நீதிமன்றம்.
பின்னர், நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். மேல் முறையீடு செய்திருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அவ்வழக்கில் தீர்ப்பு சொன்ன சென்னை உயர் நீதிமன்றம், ஏற்கனவே விதித்திருந்த இடைக்கால தடையை உறுதி செய்து உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீப்பானது ஓ.பி.எஸ். உட்பட அவரது அணியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரையுமே அதிர்ச்சி அடையச் செய்த நிலையில் தான், ‘வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில்,
தனது வேட்பாளர்களை அதிமுக (ஓ.பி.எஸ். அணி) என்று அனுமதிக்கவும், பார்ம் ஏ, பி. ஆகிய வேட்பாளர் படிவங்களில் கட்சியின் ஒருங்கினைப்பாளர் என்ற முறையில் தன்னை கையெழுத்திட அனுமதிக்குமாறும்’ தேர்தல் ஆணையத்தில் மனு செய்திருந்தார் ஓ.பி.எஸ்.
இந்நிலையில் தான், மோடியின் மேடையிலேயே, “அதிமுக சார்பாக ஓ.பன்னீர் செல்வம் பேசுவார்” என அழைத்து ஓ.பி.எஸ்-ஐ புலகாங்கிதம் அடையச் செய்து விட்டார் எக்ஸ்.மினிஸ்டர் கே வி.ராமலிங்கம்!
ஆனால், அந்த நேரம் பார்த்து மேடையை நோக்கி மோடி வரவே, “போதும் நிப்பாட்டுங்க” என்றபடி ஓ.பி.எஸ்.சை மைக் முன் இருந்து விலக்கியதும், செய்வதறியாது ஓ.பி.எஸ். தடுமாறி நின்ற கனமும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
- ‘ஐ தமிழ் நியூஸ்’ செய்திகளுக்காக, பாரதி வேந்தன்