அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பொதுக்குழுவை ஒத்திவைக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு எழுதிய கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23 நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தின் போது, ஒற்றைத் தலைமை விவகாரம் பேசப்பட்டது. இதனால் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே கடந்த சில நாட்களாக ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.
அதில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏ-க்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாக தகவல் வெளியாகியது.
இந்தநிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக குழப்பான சூழல் நிலவுவதால், பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என்று ஓபிஎஸ்-இடம் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பொதுக்குழுவில் கடந்த கால நடைமுறைகள் பின்பற்றப்படாது என்பதால் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுக்குழுவை தள்ளிவைக்கக் கோரும் ஓபிஎஸ் கடிதம் நேற்று இபிஎஸ் தரப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 36 மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு இருக்கிறது” என தெரிவித்தார்.