கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் சின்ன வயது முத்தழகு கேரக்டரில் நடித்த நடிகை கார்த்திகா தேவி சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.
நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற பருத்திவீரன் திரைப்படம் முழுக்க முழுக்க மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டது.
இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை பிரியாமணி கதாநாயகியாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா மணி நடித்த முத்தழகு கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. சின்ன வயது முத்தழகுவாக நடித்த குழந்தையும் பலருடைய மனதை கவர்ந்திருந்தார்.
பருத்திவீரன் படத்தில் சின்ன வயது முத்தழகு கேரக்டரில் நடித்தது மதுரையை சார்ந்த கார்த்திகா தேவி. மதுரை பக்கத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த கார்த்திகா தேவி நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது தான் படிக்கும் பள்ளியில் பருத்தி வீரன் திரைப்படத்திற்காக மாணவிகளை புகைப்படம் எடுத்து இருக்கிறார்கள்.
கார்த்திகா தேவி டான்ஸ் நன்றாக ஆடுவாராம். அப்போது ஆடிசனுக்காக இவரை டான்ஸ் ஆட சொன்னவுடன் சற்றும் தயங்காமல் உடனே நடனமாடி அசத்தியிருக்கிறார் கார்த்திகை. அதன் பிறகு இவரை இந்த திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்கு செலக்ட் செய்து விட்டார்களாம்.
ஆனால் அந்த நேரத்தில் படத்தில் நடிப்பதற்கான சம்பளம் பற்றி எல்லாம் எதுவும் தெரியாதாம். கார்த்திகாவின் தந்தையிடம் சம்பளமாக 100 அல்லது 500 ரூபாய் தான் கொடுத்து அனுப்புவார்களாம்.
அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் சம்பளம் சொற்ப பணமாக தான் கிடைத்திருக்கிறது. அடுத்த சில வருடங்கள் கழித்து கார்த்திகா தேவியின் தந்தை இறந்த பிறகு, இவருடைய வீட்டில் மூன்று பெண் குழந்தைகள் என்பதால் குடும்பம் மிகவும் கஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடன் பிரச்சனையால் தவித்த போது பருத்திவீரன் திரைப்படத்திற்கு நடிக்க வைப்பதற்காக கூட்டிச் சென்றவர்களிடம் தங்களுடைய நிலைமையை கூறி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எந்த உதவியும் செய்யவில்லை என்று கார்த்திகா தேவி கூறியிருக்கிறார்.
பருத்திவீரன் திரைப்படம் கார்த்திகாவின் ஊரில் 20 நாட்கள் நடந்த போது அவரின் அம்மா தான் அமீர், பிரியாமணிக்கு எல்லாம் சாப்பாடு செய்து கொடுத்துள்ளார். இப்போது எங்களுடைய நிலைமை பற்றி அமீருக்கு தெரியுமா? என்பது கூட எங்களுக்கு தெரியாது என்று அந்த பேட்டியில் கார்த்திகா தேவி மனமுருகி பேசி இருக்கிறார்.