4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்பும் நிலையில், இதனை சாதகமாக பயன்படுத்தி தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, வார விடுமுறை என 4 நாட்கள் தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு தற்போது விடுமுறை முடிந்து மீண்டும் சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், அரசு பேருந்துகள் மற்றும் ரெயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் தனியார் பேருந்தை நாட வேண்டியுள்ள சூழ்நிலையில், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நெல்லையில் இருந்து சென்னை வருவதற்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.2,000 முதல் – ரூ.4,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன.
மதுரையில் இருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.2,500 – ரூ.3,600 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது என பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கோவை – சென்னை இடையே அதிகபட்சமாக ரூ.2,000 – ரூ.2,840 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சேலம் – சென்னை தனியார் பேருந்துகளில் ரூ.2000-க்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் – சென்னை இடையே அதிகபட்சமாக ரூ.3,600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், பேருந்துகளின் கட்டண உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.