மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டுறவுத்துறை மூலம் காய்கறி, மளிகை பொருட்களை கொள்முதல் விலையை விட குறைந்த விலையில் மக்களுக்கு கொடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தல்படி அரசின் சார்பில் தேவையான அனைத்து அடிப்படை நிவாரண உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் மக்களுக்கு தேவையான அனைத்தும் பல்வேறு இடங்களில் கிடைக்கும்படி நடமாடும் காய்கறி மற்றும் மளிகை விற்பனை தொடக்கத்தை துறையின் அமைச்சர் பெரியகருப்பன் தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு கூட்டுறவு அங்காடியில் தொடக்கி வைத்தார்.
பால், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும், உணவுக்கு தேவையான காய்கறிகளும் இந்த நடமாடும் வண்டி மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனைக்கு கொடுக்கப்படுகிறது.
அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி;
மிக்ஜாம் புயலால் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிக மழை பெய்துள்ளது. அரசு பொறுப்பேற்றபிறகு எடுக்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளால் தண்ணீர் செல்வதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எந்த காலகட்டத்திலும் எந்த அரசும் செய்யாத நிவாரண பணிகளை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அந்த சுவடு தெரியாத வண்ணம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க அரசின் அனைத்து துறைகளும் விரைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் இருக்கும் இடங்களுக்கு தேவையான பொருட்களை கூட்டுறவுதுறை மூலம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று சென்னையில் நகரும் 10வாகனங்களில் காய்கறி, மளிகை பொருட்கள் விநியோகிக்கப்பட்டது . இன்று 50வாகனங்களில் விநியோகிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் கூடுதல் வாகனங்கள் மூலம் மக்களுக்கு கொடுக்க ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். ஆவின் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் இதில் கிடைக்கும் படி ஏற்பாடு செய்துள்ளோம்.
வெகுவாக பாதிக்கப்பட்ட கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, மேடவாக்கம், வேளச்சேரி, திருவல்லிக்கேணி, பெரம்பூர், தரமணி, சிந்தாதிரிப்பேட்டை, ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு நகரும் காய்கறி, மளிகை, பால் போன்றவை விநியோகிக்கப்படுகிறது.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட்டுறவுத்துறை மூலம் காய்கறி, மளிகை பொருட்களை கொள்முதல் விலையை விட குறைந்த விலையில் மக்களுக்கு கொடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இடவசதி உள்ள நியாயவிலைக்கடைகளிலும் காய்கறி, மளிகை, பால் உள்ளிட்டவை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.