கிணத்துக்கடவில் தந்தை பெரியார் சிலையை அவமதிப்பதா? குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை தேவை என்றும், தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி(veeramani) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொள்ளாச்சி கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் அருகே சமத்துவபுரம் நுழைவு வாயிலில் மார்பளவு கொண்ட பெரியார் சிலை வைக்கப்பட்டு உள்ளது. கம்பி வேலி அமைக்கப்பட்டு அதற்குள் சிலை மிகவும் பாதுகாப்புடன் இருந்தது.
இந்தநிலையில் நேற்று காலை அந்த பெரியார் சிலை மீது யாரோ மாட்டு சாணத்தை வீசி அவமதிப்பு செய்து இருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அவர் வெளியிட்டுக்குள்ள பதிவில்:
கிணத்துக்கடவு வடசித்தூரில் உள்ள தந்தை பெரியார் சிலையை சில காவிக் காலிகள் அசிங்கப்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தோம். கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விஷமிகளை – குற்றவாளிகளை உடனடியாகப் பிடித்து கடுமையாக தண்டிக்கும் வண்ணம் உரிய சட்டப் பிரிவுகளைக் கொண்டு, சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளக் கேட்டுக்கொள்கிறோம்.
தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்திட இப்படிப்பட்ட கேவலமான நடவடிக்கையில் பா.ஜ.க.வினர் ஈடுபடுகிறார்கள்.
இதற்குரிய விலையை வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வட்டியும் முதலுமாகத் தரத் தயாராகி வருகிறார்கள் என்பதை மறக்கவேண்டாம் என்று தெரிவித்த அவர்,
தந்தை பெரியார் ஒரு கட்சிக்குச் சொந்தமானவர் என்று மனப்பால் குடிக்கவேண்டாம். மண்ணை மணந்த மணாளர் அவர். ஒட்டுமொத்த தமிழின மக்களே ஓரணியில் நின்று உரிய வகையில் தேர்தலில் பாடம் கற்பிப்பார்கள் என்பது கல்லின்மேல் எழுத்து என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.