போதைப் பாக்கு போட்டதை கண்டித்ததால் ஆசிரியரைத் தாக்கிய மாணவன் சம்பவம் குறித்து போதைப் பொருட்களில் இருந்து தமிழகம் மீட்டெடுக்கப்படப் போவது எப்போது? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவா எனப்படும் போதைப் பாக்குகளை சாப்பிட்டு வகுப்பறையில் போதையில் உறங்கிய மாணவனை கண்டித்த ஆசிரியர், அந்த மாணவனால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவத்திற்காக சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் :
மாணவர்களின் வாழ்வில் 12-ஆம் வகுப்பு மிகவும் முக்கியமானது. அந்த வகுப்பில் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிமுறைகளைத் தேடாமல், போதைப் பாக்குகளில் மாணவர்கள் வாழ்க்கையை தொலைக்கிறார்கள் என்றால், அவை மாணவர்களின் வாழ்வில் எத்தகையக் கேட்டை ஏற்படுத்துகின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம். மாவா உள்ளிட்ட அனைத்து போதைப் பாக்குகளும் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவை தாராளமாக கிடைப்பது தான் மாணவர்களும், இளைஞர் சமுதாயமும் சீரழிவதற்கு காரணம் ஆகும்.
மாவா மற்றும் போதைப்பாக்கில் தொடங்கும் சீரழிவுப் பயணம் மது, கஞ்சா எனத் தொடருகிறது. வகுப்பறையில் ஆசிரியரைத் தாக்குவதில் தொடங்கும் குற்றச்செயல்கள், காவல்துறை அதிகாரியை தாக்கும் அளவுக்கு உச்சத்தை அடைகின்றன. சமூகம் சீரழிவதற்கு சட்டப்படி விற்கப்படும் மது உள்ளிட்ட போதைப் பொருட்களும், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மாவா, குட்கா உள்ளிட்ட போதைப் பாக்குகளும் தான் காரணம் ஆகும். இவற்றை ஒழிக்காமல் மாணவர்களையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியாது.
தமிழக அரசு நினைத்தால் ஒரே ஆணையில் அனைத்து மதுக்கடைகளையும் மூட முடியும். சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் அனைத்து போதைப் பொருட்களையும் ஒரே நாளில் கட்டுப்படுத்த முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை அரசும், காவல்துறையும் முழு வீச்சில் மேற்கொள்ளாதது ஏன்? என்பது தான் தெரியவில்லை. இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்தையும் காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருப்பதால், அனைத்து வகையான போதைப் பொருட்களையும் முற்றிலுமான ஒழித்து தமிழ்நாட்டை போதையில்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.