முகநூலில் நட்பாக பழகி திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் காரணை புதுச்சேரியைச் சேர்ந்தவர், ஷோபனா (வயது 27) திருமணமாகி கணவரை இழந்த இவர் தன் ஆறு வயது மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் புழல் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரியும், விக்னேஷ்வர் என்பவருக்கும், சில மாதங்களுக்கு முன் முகநுால் (Facebook) வாயிலாக பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாகப் பழகி அதன்பின் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
விக்னேஷும்,ஷோபனாவும் திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் ஷோபனா கர்ப்பமாகி உள்ளார். உடனே இதையறிந்த விக்னேஷ்வர் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்யவும் வைத்துள்ளார். பின்னர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்துக்கொள்வேன் என ஷோபனா கூறியுள்ளார். இதனால் விக்னேஷ்வர் ஷோபனாவின் வீட்டில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்துள்ளார்.
ஒரு சில மாதங்கள் கழித்து விக்னேஷ்வர் ஷோபனாவிடம் இனி உன்னுடன் வாழ மாட்டேன் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷோபனா செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், டிசம்பர் 27ம் தேதி, புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் விக்னேஷ்வர் அழைத்து பேசினர் அதில், விக்னேஷ்வர் நான் சேர்ந்து வாழ விருப்பமில்லை என விக்னேஷ்வர் தெரிவித்தார்.
தொடர்ந்து சென்னை காவல் ஆனையர் அலுவலகத்தில்,புகார் அளிக்கப்பட்டது. அங்கிருந்து மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பபட்ட நிலையில் அந்த காவல் நிலைய போலீசார், சரிவர வழக்கை விசாரிக்கவில்லை. பின்னர் செல்போனில் ஷோபனாவை தொடர்பு கொண்ட விக்னேஷ் ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். இதுகுறித்து மாதர் சங்கங்களிடம் புகார் கூறுவதாக தெரிவித்துள்ளார். அதற்கு, மாதர் சங்கங்களையும் விக்னேஷ்வர், ஆபாசமாக பேசி ஷோபனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.
இதையடுத்து தாம்பரம் காவல் ஆனையர் அலுவலகத்தில் ஷோபனா புகார் அளித்தார். அந்த புகார் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு, அனுப்பட்டது.எனினும் போலீசார் வழக்கை சரிவர விசாரிக்க மறுப்பதாக ஷோபனா குற்றஞ்சாட்டி உள்ளார்.