காந்தி ஜெயந்தி : மகாத்மா காந்தி நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை!!

நாடு முழுவதும் இன்று (02.10.23) காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டெல்லி ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் காந்தியின் பிறந்த நாள் விழா சர்வதேச அகிம்சை தினமாக அவரது பிறந்தநாளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 155 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு சார்பாக நேற்று ஒரு மணி நேரம் தூய்மை பணி இயக்கம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பல்வேறு இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாளை ஒட்டி டெல்லி ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும், இன்று (02.10.2023) திங்கட்கிழமை சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில், காந்தியடிகளின் 155ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, காலை 10.00 மணியளவில் அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Total
0
Shares
Related Posts