பெங்களூருவில் 8 வயது சிறுமி தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறிய நிலையில், டெலிவரி நபரைப் (delivery man) பொதுமக்கள் கண்மூடித்தனமாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பெற்றோர் தங்களது 8 வயது பெண் குழந்தையை காணாமல் தேடிய நிலையில், சிறுது நேரத்தில் அந்த சிறுமி மாடியில் இருந்து அழுது கொண்டே கீழே வந்துள்ளார்.
அப்போது, சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்த போது, உணவு டெலிவரி செய்ய வந்த நபர் (delivery man) தன்னை வலுக்கட்டாயமாக மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறியுள்ளார்.
மேலும், அந்த நபரின் கையை கடித்துவிட்டு தான் தப்பி வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். சிறுமி கூறியதை கேட்ட பெற்றோர் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும், அபார்ட்மெண்ட்டின் காவலாளிக்கும் உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர்.
அதை அடுத்து, காவலாளி கேட்டை மூடிவிட்டு அந்த உணவு டெலிவரி செய்யும் நபரைத் தேடிய நிலையில், சிறுமி அந்த வளாகத்திற்குள் இருந்த உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவரை அடையாளம் காட்டியுள்ளார். அதனை நம்பிய பெற்றோரும் பொதுமக்களும் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற நபரை அடித்து உதைத்துள்ளனர். இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர்.
இந்நிலையில், உணவு டெலிவரி செய்யும் அந்த நபர் சிறுமி கூறியதை மறுத்த நிலையில், அருகில் இருக்கும் வீட்டில் உள்ள சிசிடிவியை போலீசார் ஆய்வு செய்த போது சிறுமி தனியாக மொட்டை மாடிக்குச் செல்வது பதிவாகியிருந்தது.
இதையடுத்து, போலீசார் அந்த சிறுமியிடம் விசாரித்த போது, சிறுமி தான் மொட்டை மாடியில் தனியாக விளையாடி கொண்டிருந்ததாகவும், வீட்டிற்கு செல்ல தாமதமானதால் பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து பொய் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து, மகளை காணாத பதற்றத்தில் சிறுமி கூறியதை தாங்கள் நம்பிவிட்டதாக பெற்றோர் கூறியுள்ளனர்.
இந்நிலையில், அசாமைச் சேர்ந்த அந்த உணவு டெலிவரி செய்யும் நபரிடம் காவல்துறையினர் சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரைத் தாக்கியவாகள் மீது புகார் கொடுக்க விரும்பினால் புகார் கொடுக்கலாம் எனக் கூறிய நிலையில், பெற்றோரின் நிலைமையை புரிந்து கொண்ட அவர் புகார் அளிக்கவில்லை.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.