அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 11 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவத்திற்கு ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்
நாட்டு வெடி தயாரிப்பு ஆலை விபத்து:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்தின் வயல் பகுதியில் திருமழபாடியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் தீபாவளி பண்டிகையையொட்டி இந்த ஆலையில் வெடி மற்றும் பட்டாசு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வந்தது.இந்த பணியில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், பட்டாசு ஆலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறியது.இந்த கோரவிபத்தில் 3 பெண்கள் உட்பட 11 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 13 பேருக்கு தீவிர சிகிச்சைதஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் என்ற இடத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் ஆலையில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்திருக்கின்றனர்; மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் முழு நலம் பெற என விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த நான்கு நாட்களில் நடைபெற்ற மூன்றாவது பட்டாசு ஆலை விபத்து இதுவாகும். பட்டாசு ஆலைகள் தொடர்பான பாதுகாப்பு விதிகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாதது தான் இத்தகைய விபத்துகள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும். பட்டாசு ஆலை பாதுகாப்பு விதிகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தி இத்தகைய விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.