நீண்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நீதி வென்றுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதாவது..,
”தமிழ்நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் தங்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட காவல் துறை மற்றும் வனத் துறையைச் சேர்ந்த 27 அதிகாரிகளின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்திருக்கிறது.
அதுமட்டுமின்றி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், அரசு வேலை அல்லது சுயதொழில் தொடங்க உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டுள்ளார். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் முழுமையாக ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதமாகவேனும் நீதி கிடைத்துள்ளது.
வீரப்பன் வேட்டை என்ற பெயரில் தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப் பகுதியில் உள்ள வாச்சாத்தி கிராம மக்களுக்கு 1992-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் நாள் வனத்துறையினரும், காவல்துறையினரும் இணைத்து அரங்கேற்றிய கொடூரங்களும், வக்கிரங்களும் மனித குலத்தால் நினைத்துப் பார்க்க முடியாதவை. வாச்சாத்தி கிராமத்தில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி குழந்தைகள் உட்பட 133 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வளவுக்குப் பிறகும் வாச்சாத்தி கொடுமைகளுக்கு நீதி வழங்க வேண்டிய அன்றைய தமிழக அரசு, அனைத்தையும் மூடி மறைக்கவே முயன்றது. நீண்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு வாச்சாத்தி மக்களுக்கு நீதி பெற்றுத்தரப்பட்டுள்ளது.
காவல் துறை, வனத் துறை போன்ற வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் கொண்ட அமைப்புகள், எளிய மக்களிடம் அத்துமீறுவதையும், தங்களுக்கு மேலிடத்திலிருந்து வரும் அழுத்தங்களை தணித்துக் கொள்ள அப்பாவி மக்களை கொடுமைப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளன.
மனித உரிமைகளைப் பற்றி இந்த அமைப்புகள் கவலை கொள்வதே இல்லை. அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு தான் வாச்சாத்தி வன்கொடுமை ஆகும். இந்த தீர்ப்புக்கு பிறகாவது சட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகள் மனிதர்களையும், மனித உரிமைகளையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
வாச்சாத்தி வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார்களா என்பதைப் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.10 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். வாச்சாத்தி மக்கள் சுய தொழில் செய்யும் நிலையில் இல்லை என்பதால் பாதிக்கப்பட்ட 18 பேரின் குடும்பத்தில் உள்ள தகுதியானவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும்.
இவை அனைத்துக்கும் மேலாக வாச்சாத்தி வன்கொடுமை போன்ற குற்றங்கள் நடைபெறும்போது, அதை மூடி மறைக்க முயலாமல், வெளிப்படையாக ஒப்புக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கும், குற்றம் செய்தவர்களை தண்டிப்பதற்கும் தேவையான அரசியல் துணிச்சலை தமிழக அரசு பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.