சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதால்,பொதுமக்கள் 2 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், புதுச்சேரியில் இருந்து 300 கி.மீ., தொலைவில் கிழக்கு-தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், இன்று அதி கனமழை பெய்யும் என்பதால், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.