கலைஞர் 100 ரூபாய் நாணயத்தில் இந்தியில் பெயர் அச்சிடப்பட்டுள்ளதாக விமர்சித்த அதிகமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
MLA கே.பி.சங்கர் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :
கலைஞர் நாணய வெளியீட்டு விழாவிற்கு ராஜ்நாத் சிங்கை அழைத்ததால் ஏதோ பாஜகவுன் உறவு வைத்துக்கொள்ள போகிறோம் என்ற கோணத்தில் பேசுகிறார்கள்.
நாங்கள் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எதிர்த்தாலும், ஆதரித்தாலும் திமுக எப்போதும் அதன் கொள்கையோடு இருக்கும்.
Also Read : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்..!!
பழனிசாமி மாதிரி ஊர்ந்து, பதுங்கி பதவி வாங்குகிற புத்தி திமுகவிற்கு கிடையாது. நிச்சயமாக உறுதியாக அண்ணாவின் மீது ஆணையாக சொல்கிறேன் நமக்கென்று இருக்கிற உரிமையை ஒருநாளும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
ஒன்று அரசியல் தெரிந்திருக்க வேண்டும் அல்லது நாட்டின் நடப்பாவது புரிந்திருக்க வேண்டும். இந்த நாணய வெளியீட்டு விழாவே மத்திய அரசின் நிகழ்ச்சிதான். மறைந்த பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்களுக்கு வெளியிடப்பட்ட நாணயங்களிலும் இந்தி மற்றும் ஆங்கில வாசகங்கள் இடம்பெற்றிருக்கும்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வருகை தந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அவரே கலைஞர் நினைவிடத்தை பார்த்தே தீர வேண்டும் என்று கேட்டார். பின்னர் அனைத்தையும் பார்த்துவிட்டு ‘இதுபோல் நான் எங்கேயும் பார்த்தது இல்லை’ என்று பாராட்டினார்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், திமுகவினரை விட சிறப்பாக தலைவர் கலைஞர் குறித்து பேசினார். கலைஞர் குறித்து இந்த அளவு பாராட்டி பேச வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. ஆனாலும் அவர் தனது உள்ளத்தில் இருந்து உண்மையை பேசினார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.