மரியாதைக்குரிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்… என்று தமிழிசை கூறியுள்ளார்.
இது தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
“மரியாதைக்குரிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம் மக்களுக்காக கருத்து சொன்னால், அவர்கள் வேலை இல்லாமல்தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துகள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துகள் தானா…
ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்… அதுவும் பா.ம.க. தலைவர் பெரியவர் ராமதாஸ் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பழி சொல்வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை அரசியல் அனுபவம் மிக்க உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
மக்களுக்காக இதை சொல்கிறேனே தவிர எனக்கும் வேலையில்லாமல் இதை சொல்லவில்லை.. தமிழகத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்றுதான் மற்ற மாநிலங்களில் எனக்கு இருந்த வேலையை விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறேன். 2026 யாருக்கு வேலை இருக்கப் போகிறது யாருக்கு வேலை இல்லாமல் போகப் போகிறது என்பதை உணர்த்தும்… யாருக்கும் நிரந்தரமாக வேலை இருக்கப் போவதில்லை; யாரும் நிரந்தரமாக வேலை இல்லாமல் இருக்கப் போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.