வேலூரில், சாலை வசதி இல்லாததால் குழந்தையின் சடலத்தை 10 கிலோ மீட்டர் தூரம் பெற்றோர் கையால் தூக்கிச் சென்ற சம்பவத்தை தொடர்ந்து அந்த கிராமத்தில் சாலை வசதி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் உள்ள அத்திமரத்து கொல்லை என்ற கிராமத்தில் கூலித் தொழிலாளியான விஜி மற்றும் அவரது மனைவி பிரியா ஆகிய தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் தனுஷ்கா என்ற குழந்தை இருந்துள்ளார்.
இந்நிலையில், குழந்தை தனுஷ்கா கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்தபோது அவரை நல்ல பாம்பு கடித்த நிலையில், குழந்தையை உடனடியாக அணைக்கட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு சாலை வசதி இல்லாத காரணத்தால் குழந்தையை மருத்துவமனைக்கு செல்ல நீண்ட நேரமான நிலையில், குழந்தை பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றபோதும் சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து பாதி வழியிலேயே இறக்கி விடப்பட்ட அவர்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தே பெற்றோர் குழந்தையின் சடலத்தை தூக்கி சென்ற்றுள்ளனர்.
இந்நிலையில், குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் அல்லேரி இன்று மலைக்கிராமத்திற்கு நேரில் ஆய்வு செய்தார். பின்னர், பாம்பு கடித்து உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து, அல்லேரி மலைக் கிராமத்தில் சாலை வசதி மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதனையடுத்து தரிப்பது, மலை கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. வனத்துறை, கிராம ஊரக வளர்ச்சி துறையினர் இணைந்து தார் சாலை அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்த நிலையில், சாலையை அளவிடும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.