கோவை KMCH பார்மஸி கல்லூரியில் நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான ராஷ்ட்ர சேவிக சமிதியின் பயிற்சி முகாமை கேம்பஸ் ஆஃப் இந்தியா என்னும் மாணவர் அமைப்பினர் கொடுத்த புகாரால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான ராஷ்ட்ர சேவிக சமிதியின் பயிற்சி முகாம் வரும் டிசம்பர்-31 அன்று கோவை KMCH பார்மஸி கல்லூரியில் நடைபெறுகிறது என்றும், இந்த பயிற்சி முகாமில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தீவிரவாத பயிற்சிகள் கொடுப்பதாகவும், கடந்த 15 ஆம் தேதியன்று, கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். மேலும் கோவை KMCH கல்லூரி டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குவதால் அப்பல்கலைக்கழக துணைவேந்தரிடமும் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், இந்த புகாரை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இதுகுறித்து மாவட்ட காவல்துறையினரிடம் நேரில் சென்று புகார் குறித்து கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் கேட்டதாகவும்,அப்போது, ஆர் எஸ் எஸ் அமைப்பின் பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அக்கல்லூரி நிர்வாகமும், கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரை அழைத்து ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நடை பெறாது என உறுதியளித்திருப்பதாக அந்த அமைப்பின் மாநில தலைவர் அஷ்ரப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.