1996 முதல் 2001 வரை ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, மத்தியில் இருந்த அரசுகளை தாங்கி பிடித்துக் கொண்டு இருந்தார்களே தவிர கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளி போடவில்லை என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை நாட்டிற்கு கச்சத்தீவை காவு கொடுக்கும் இந்தியா-இலங்கை ஒப்பந்தம் 1974ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது என்றாலும் அதற்கு முன்பே இந்தப் பிரச்னை குறித்து பேசப்பட்டு வந்தது.
கச்சத்தீவு தாரைவார்ப்பு ஒப்பந்தம் இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையே 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இறுதியில் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பில் அன்றைய பிரதமர் திருமதி.இந்திரா காந்தி அவர்கள் 26-06-1974 அன்றும், இலங்கையின் சார்பில் அன்றைய இலங்கை அதிபர் திருமதி சிரிமாவோ பண்டாரநாயகே அவர்கள் 28-06- 1974 அன்றும் கையொப்பமிட்டனர்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய அப்போதைய வெளியுறவு துறை அமைச்சர் திரு. ஸ்வரண் சிங் அவர்கள், இது குறித்து அப்போதைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி அவர்களிடம் விரிவாக, குறைந்த பட்சம் இரண்டு முறை கலந்துரையாடப்பட்டது என்றும் தெரிவித்து இருக்கிறார்.
இதிலிருந்து, இந்திய-இலங்கை நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே அப்போதைய தமிழக முதல்வர் திரு.கருணாநிதி அவர்களுக்கு கச்சத்தீவு மற்றும் அதைச்சுற்றியுள்ள கடல் பகுதிகளையும் இந்தியா, இலங்கைக்கு தாரை வார்க்கப் போகிறது என்பது நன்கு தெரியும் என்ற உண்மை தெளிவாகிறது.
இது போன்ற கருத்துரு மத்திய அரசிடம் இருப்பதாய் அறிந்த உடனேயே அதை திரு.கருணாநிதி அவர்கள் எதிர்த்து இருக்கலாம், போராட்டங்களை முன்னெடுத்து இருக்கலாம் அல்லது உச்சநீதிமன்றத்தையாவது நாடியிருக்கலாம்.
ஆனால் இது போன்று எதையும் செய்யாமல் மவுனம் காத்த திரு.கருணாநிதி அவர்கள் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட பிறகு பெயரளவில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி கச்சத்தீவு பிரச்சனைக்கு மூடு விழா நடத்தினார்.
சட்டமன்றத்தில் தீர்மானத்தின் போது பேசிய திரு.கருணாநிதி அவர்கள் இது பற்றி எதுவுமே தங்களுக்கு தெரியாது, பத்திரிக்கையை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று கூறியிருந்தார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதன் முதலாக தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டவுடன் 03-10-1991 அன்று கச்சத்தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை திரும்பப் பெற வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பினார்கள்.
ஆனால், அதே சமயம் 1996 முதல் 2001 வரை தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, மத்தியில் இருந்த அரசுகளை தாங்கி பிடித்துக் கொண்டு இருந்தார்களே தவிர கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளி போடவில்லை. அதன்பிறகு இரண்டாவது முறையாக 2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தார்கள். ஆனால் அப்பொழுதும் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுகவினர் கச்சத்தீவை மீட்க எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று சசிகலா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்