19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய அனைத்து வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் சசிகலா(Sasikala) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய அணி ஏற்கனவே 5 தங்கம் உள்பட 22 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 5வது இடத்தை பெற்று இருந்த நிலையில் தற்போது 8 தங்கப்பதக்கங்கள் உட்பட 32 பதக்கங்களை வென்று பதக்கபட்டியலில் 4வது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஏற்கனவே 5 தங்கப்பதக்கங்கள் வென்ற நிலையில் தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் குழுப் பிரிவில் தங்கமும், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் பாலக் குலியா அவர்கள் தங்கமும், ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழுப் பிரிவில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
அதிலும் குறிப்பாக வூசூ விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற மணிப்பூரை சேர்ந்த இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான சூழ்நிலையிலும் மணிப்பூரின் நம்பிக்கை தேவதையாக ஆசிய போட்டியில் பங்கேற்று நூலிழையில் தங்கத்தை தவறவிட்டு வெள்ளிப்பதக்கத்தை வென்று நம் தேசத்திற்கு பெருமை சேர்த்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது.

19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் நம் வீராங்கனைகளும், வீரர்களும் பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில் தற்போது வரை 8 தங்கம் உள்பட 32 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 4வது இடத்தை பெற்று இந்தியா முன்னேறிக்கொண்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
நமது தேசத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில் கடின உழைப்பாலும், தங்கள் திறமைகளாலும் சாதனை படைத்து கொண்டிருக்கும் நம் வீராங்கனைகளுக்கும், வீரர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.