அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரையும் எச்சரித்த பாஜகவை சேர்ந்த நடிகை ரஞ்சனா நாச்சியார்என்ற பெண்மணியை, அவர் யார் கண்டிப்பதற்கு என்று கடுமையாக வசைபாடிய தி மு க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த அசம்பாவிதத்திற்கு பொறுப்பேற்பார்களா? என்று பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
குன்றத்தூர் அரசு பள்ளியில் படித்து வந்த சந்தோஷ் என்ற மாணவன் நேற்று அரசு பஸ் படியில் தொங்கி பயணித்து இருந்து கீழே விழுந்ததால் பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதால் கால்கள் நசுங்கி, செயலிழந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றபட்டன என சொல்லப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் குன்றத்தூர் அருகே கிருகம்பாக்கத்தில் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் கொண்டிருந்த மாணவர்களை கண்டித்ததோடு, அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரையும் எச்சரித்த பாஜகவை சேர்ந்த ரஞ்சனா நாச்சியார்என்ற பெண்மணியை, அவர் யார் கண்டிப்பதற்கு என்று கடுமையாக வசைபாடிய தி மு க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த அசம்பாவிதத்திற்கு பொறுப்பேற்பார்களா? அல்லது
அந்த பெண்மணியின் சமூக அக்கறையை பாராட்ட மனமில்லாமல், அந்த பெண்மணியை அதிகாலையில் வீட்டிற்கு சென்று கைது செய்த காவல்துறை, கால்களை இழந்த மாணவனின் துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்குமா? அல்லது
ரஞ்சனா நாச்சியார் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளில் மாங்காடு காவல்நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டிய சூழ்நிலையினை ஏற்படுத்திய தமிழக அரசு இந்த மாணவனின் இழப்பிற்கு பொறுப்பேற்குமா?
விதிமீறல்களை செய்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்காமல் மாணவர்களிடையே ஒழுக்கத்தை கொண்டு வர முனைந்த அந்த பெண்மணியின் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக குற்றம் சுமத்தி வழக்கு தொடுத்த மாநகர போக்குவரத்து கழகம், அதே விதி மீறல்களை செய்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்குமா? அல்லது இரு கால்களை இழந்த மாணவன் மீது தான் தவறு என்று தப்பிக்க பார்க்குமா?
யாருக்கும் வெட்கமில்லை! எதற்கும் கவலையில்லை! எங்கும், எல்லாவற்றிலும் பாழும் அரசியல் என்று நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்து உள்ளார்.