ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி சாகர் அருகே பள்ளி நேரத்தில் பஸ் இயக்க கோரி மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர்கடவு, பட்டர மங்கலம் ஆகிய இரு கிராமங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ராஜன் நகர் கஸ்தூரிபா அரசு நிதி உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளுக்குக் தினந்தோறும் அரசுப் பேருந்தில் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாகப் பள்ளி நேரத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்து மேற்கண்ட இரு கிராமங்களுக்கும் இயக்கப்படாத நிலை இருந்துவந்தது. இதனையடுத்து, இந்த இரு கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளிக்குப் பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளித்தும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்காததால் பவானிசாகர் பண்ணாரி சாலையில் புதுப்பீர்கடவு பிரிவு பேருந்து நிறுத்தத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த பவானிசாகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போக்குவரத்துக் கழக அலுவலர்களிடம் அலுவலர்களிடம் பேசி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கலைந்துசென்றனர்.
இதனால் பவானிசாகர் பண்ணாரி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.