அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 26ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதனால், 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைக்கு பின்பு கூறிய தீர்ப்பில், “செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது; ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல, அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம்” என்று 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதையடுத்து, இன்று இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, சுந்தரேஷ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் அமலாக்கத்துறை எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதனது தொடர்ந்து, வழக்கின் அடுத்த விசாரணை வரை நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என கூறி வழக்கின் விசாரணையை வரும் 26ம் தேதி மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்து அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.